Advertisment

‘மாணவிகளிடமும் பெற்றோரிடமும் இப்படியா பேசுவது?’ -தலைமை ஆசிரியருக்கு எதிராக ஒரு கிராமம்!

‘தலைமை ஆசிரியராக இருந்துகொண்டு இப்படி பேசலாமா?’ என்று விருதுநகர் மாவட்டம் – சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர், கொதித்துப்போய் புகார் அளித்துள்ளனர். 70 பேர் வரை கையெழுத்திட்டு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கும் அந்த மனுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் காளிராஜ் குறித்த தங்களின் குமுறலைப் பதிவு செய்திருக்கின்றனர்.

Advertisment

Why talk like that to students and parents? A village against teacher

காளிராஜ்

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடத்திய கூட்டத்தில் தலைமை ஆசிரியர் காளிராஜ், மாதவிலக்கு, குழந்தை பிறப்பு குறித்து தவறாகப் பேசினார் என்றும், “கல்யாணமான புதிதில் வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் யாரெல்லாம் சில்மிஷத்தில் ஈடுபட்டீர்கள்?” என்று தந்தையரிடமும், “இரவு நேரத்தில் பாக்கு போட்ட வாயுடன் கணவர் நெருங்கினால் இசைவு தெரிவிப்பீர்களா? விலகிச் செல்வீர்களா?” என்று தாய்மார்களிடமும், “நீங்கள் தலையில் பூ வைத்துக்கொண்டு வந்தால் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. எனவே, பூ சூடிக்கொண்டு பள்ளிக்கு வராதீர்கள்.” என்று வகுப்பறையில் மாணவிகளிடமும் எல்லைமீறிப் பேசியதாகக் குற்றம் சாட்டியிருக்கின்றனர். பள்ளி அளவிலோடு நின்றுவிடாமல், மத்திய, மாநில அமைச்சர்களை விமர்சித்தார் என்றும், இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை ஆட்சியாளர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுத்துகிறார்கள் என்றும் காளிராஜ் பேசியதாக, அவர் மீதான குற்றச்சாட்டுக்கு மனுவில் வலு சேர்த்திருக்கின்றனர்.

“அரசு வழங்கும் இலவச லேப்டாப் 5000 ரூபாய் கூட பெறாது. ரூ.25000-க்கு கொட்டேசன் வாங்குகிறார்கள். இது ஒரு வீணாய்ப்போன திட்டம். உங்கள் பெற்றோரின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான் உங்களுக்கு லேப்டாப் தருகிறார்கள்.” என்று மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் காளிராஜ் பேசியது குறித்து ரகசிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.

Advertisment

teacher

தலைமை ஆசிரியர் காளிராஜ், தன் தரப்பு விளக்கத்தை அளித்திட முன்வராத நிலையில், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், ஊர் முக்கியஸ்தருமான ராஜாவிடம் பேசினோம். “நானே தலைமை ஆசிரியர் காளிராஜிடம் கேட்டேன். ‘அப்பா ஸ்தானத்தில் மாணவிகளிடம் பேசியதை தப்பாகச் சொல்கிறார்கள். பெற்றோரிடம் ஏதோ டென்ஷனில் பேசிவிட்டேன். இனிமேல் திருத்திக்கிறேன்’னு சொன்னார். ஸ்கூலுக்கு அவர் சில நல்ல காரியங்களும் செய்திருக்கிறார்.” என்றார்.

ஆசிரியர் தரப்பிலிருந்து நம்மிடம் பேசிய ஒருவர் “குறிப்பிட்ட ஒரு ஜாதி ஆதிக்கம்தான் இந்த ஸ்கூலை ஆட்டிப்படைக்கிறது. தலைமை ஆசிரியர் காளிராஜ் அந்த சமுதாயத்தவர் கிடையாது. அதனால், அவரை மாற்றியே தீரவேண்டும் என்று ஒரு கோஷ்டி வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகிறது. பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி புகார் கொடுத்திருக்கிறது. இதை முன்னின்று செய்தது கணக்கு வாத்தியார் தாமோதரன்தான். வேறு சமுதாயத்தைச் சேர்ந்த யாரையும் இந்த ஸ்கூலில் தலைமை ஆசிரியராக இருக்கவிட மாட்டார்கள். ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கிற கட்சிக்காரர் கடற்கரை, ஜாதி அடிப்படையில் இந்த ஸ்கூல் விஷயத்தில் தலையிடுகிறார். ஆசிரியர்களிடம் கட்டப் பஞ்சாயத்து பண்ணுகிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் ஐ.ஏ.எஸ். ஆபிசராக இருக்கிற உமாநாத் சாத்தூர் ஏரியாக்காரர்தான். இத்தகையவர்களை அவர் ஊக்குவிக்கிறார்.” என்றார். ஆசிரியர் தாமோதரனோ, “வேற எந்த நோக்கமும் எனக்கு இல்லை. இந்தப் பள்ளிக்கூடம் நல்லாயிருக்கணும்னு நினைக்கிறேன்.” என்றார்.

teacher

“அந்தத் தலைமை ஆசிரியர் அப்படி என்னங்க தப்பா பேசிட்டாரு?” என்று கேட்ட இன்னொரு ஆசிரியர் “குட் டச்; பேட் டச் சம்பந்தமா மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்கிறாங்க. எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தணும்கிறாங்க. இதையெல்லாம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொன்னால்தான் மனதில் அழுத்தமாகப் பதியும். காளிராஜ் யாரிடமும் தனிப்பட்ட முறையில் தப்பாகப் பேசவில்லையே? பெற்றோர் கூட்டத்திலும் வகுப்பறையிலும்தானே பேசியிருக்கிறார்?” என்றார் யதார்த்தமாக.

teacher

எது நல்லது? எது கெட்டது? என்று மாணவர்களுக்குச் சொல்லித்தரும் உன்னத இடத்தில் இருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்று உலகுக்கு அடையாளம் காட்டுவதில், மாணவர்களும், பெற்றோரும் உன்னிப்பாக இருக்கின்றனர். ஆசிரியராகவே இருந்தாலும், பாடமே நடத்தினாலும், இன்றைய தலைமுறையினரிடம் உஷாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், புகாரில் சிக்கி விசாரணைக்கு ஆளாக வேண்டியதுதான். ஆசிரியர் சமுதாயத்துக்கு இதை நன்றாகவே உணர்த்தியிருக்கிறது சின்னக்காமன்பட்டி கிராமம்.

report teachers Sexual Abuse
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe