ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலையானது 19 நாட்கள் நிலையாக இருந்தது ஏன் ? பாஜக அரசுக்கு ஈஸ்வரன் கேள்வி

05:21 PM May 21, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்துவிட்டோம் என்று மத்திய அரசு மக்களை முட்டாளாக்குவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

ADVERTISEMENT

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: ’’டீசல் விலை உயர்வால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை பைசா கணக்கில் அதிகரித்து தற்போது புதிய உச்சத்திற்கு கொண்டு வந்திருப்பதை மத்திய, மாநில அரசுகள் கண்டுக்கொள்ளாமல் வேடிக்கைப்பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

19 நாட்களாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் உயர்த்தப்படுகிறது. தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலையானது 19 நாட்கள் நிலையாக இருந்தது ஏன் ?. அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் நிலையாக இருக்குமா என்பதை எண்ணெய் நிறுவனங்கள் தெளிவுப்படுத்த வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது மத்திய அரசின் விருப்பத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவது தெளிவாகிறது. இதுபோல விலை ஏற்றத்தின் போது உருவாகும் மக்களின் கோபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுத்து உள்ளதா ? என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய தொகை கைமாறுவதாக பேச்சு மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுபோன்ற லஞ்சம், ஊழலில் பாஜக தலைமை ஈடுபடவில்லை என்று சொன்னால் தனியார் நிறுவனங்களிடம் கொடுத்த அதிகாரத்தை மத்திய அரசாங்கம் திரும்ப பெறுவதில் என்ன பிரச்சினை இருக்க போகிறது.

இந்த விலையேற்றத்தால் லாரி தொழில் முற்றிலும் முடங்கி போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் தொலைதூரத்திலிருந்து சரக்கு ஏற்றிவரும் லாரிகளுக்கு வாடகை கட்டுப்படியாகாமல் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், அனைத்துதரப்பு மக்களுக்கும் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து எண்ணெய் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மத்திய அரசு திரும்பபெற வேண்டும். இல்லையென்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும். பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்படும் வரியை குறைத்து விலையேற்றத்தை உடனடியாக கட்டுக்குள் வைக்கவேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT