/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court-std_1.jpg)
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செலவுத் தொகையை வழங்காதது தொடர்பாக, காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016-17ஆம் ஆண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத் தொகையாக நிர்ணயித்து, தமிழக அரசு வழங்கி வந்தது. இந்தத் தொகை, 2017-18 -ஆம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
இந்த மூன்று (2017-18, 2018-19, 2019-20) கல்வியாண்டுகளில், மாணவருக்கான கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21 -ஆம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒரு மாணவருக்கு அரசு சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் என செலவு நிர்ணயித்தது தவறு எனக் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மூன்று ஆண்டுகளுக்கான தொகையை ஆறு வாரங்களில் வழங்கும்படியும், அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். மேலும், கல்விச் செலவுத் தொகையை குறைத்தது தொடர்பாக விளக்கமளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01_19.png)
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உத்தரவை அமல்படுத்த அரசுத் தரப்பில் மேலும் 4 வார காலம்அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ஏற்கனவே இருமுறை அவகாசம் வழங்கியும் நிலுவைத் தொகை வழங்காததைச் சுட்டிக்காட்டி, வழக்கை செப்டம்பர் 28 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.அன்றைய தினம் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)