Why is the land of indigenous people near Cuddalore being acquired

குறிஞ்சிப்பாடி அருகே புலியூர் தோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில் அவர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பேசினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் ராயநல்லூர் கண்ணன், பசுமை இயக்க சுப. உதயகுமார் உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து வேல்முருகன் செய்தியாளர்களே சந்தித்துப் பேசுகையில், “நெய்வேலி அருகே வானதி ராயபுரம் கிராமத்தில் என்எல்சி நிறுவனம் வீடு நிலங்களை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு காவல்துறையினர் அடக்குமுறைகளை ஏவித் தடுத்துள்ளனர் இது கண்டிக்கத்தக்கது. அந்த கிராமத்தில் கூட்டுப் பட்டாவில் உள்ள மக்களுக்கு தனித்தனி பட்டா வழங்கி வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, நிலம் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதனை தமிழக முதல்வர் இந்த மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment

கடலூர் அருகே மலையடிகுப்பம், பெத்தான்குப்பம் உள்ளிட்ட மலை கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த 165 ஏக்கர் அரசு நிலத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயிர் செய்தும் வீடு கட்டி வாழ்ந்த மக்களை வீடுகளையும் நிலங்களிலிருந்து முந்திரி பலா வாழை உள்ளிட்ட மரங்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி காய்க்கும் பருவத்தில் இருந்த மரங்களை வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் ராட்சத போக்களின் இயந்திரங்களைக் கொண்டு வெட்டி சாய்த்து உள்ளனர். இது எங்களின் ஈரக்குலைகளை நடுங்கச் செய்துள்ளது. எங்களின் இதயத்தையும் குடலையும் புடுங்கிப் போடுவது போல் உள்ளது. அரசு நிலமாக இருந்தாலும் அதில் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த பயிரிட்ட மக்களிடம் இந்த நிலத்தை எதற்கு எடுக்கிறோம் என்ற காரணத்தை மாவட்ட நிர்வாகம் கூற மறுக்கிறது.

அந்தப் பகுதியில் தோல் தொழிற்சாலை வருகிறது என்றும் பகுதியில் உள்ள கனிம வளங்களை சுரண்ட அகற்றப்படுகிறது என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்தப் பகுதியில் தோல் தொழிற்சாலை அல்லது சிப்காட் அமைக்கப்பட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகப்பெரிய அளவில் தமிழக போராட்டத்தை முன்னெடுக்கும். நிலத்தில் உள்ள மரங்கள் வீடுகளை பொக்லின் இயந்திரம் கொண்டு அழித்த போது எதிர்ப்பு தெரிவித்த மக்களை கடலூர் மாவட்ட காவல்துறையினர் அடக்குமுறைகளை மேற்கொண்டு பெண் என்றும் பாராமல் அவர்களை குண்டு கட்டாக இழுத்துச் சென்றுள்ளனர். காவல்துறையின் சட்டம் ஒழுங்கு செயல்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்.

Advertisment

அதேபோல் பண்ருட்டி நகரத்திற்கு அருகே அங்கு செட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆதித்தமிழர் அருந்ததிய மக்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளை முன்னறிவிப்பின்றி இடித்து தள்ளுகிறீர்கள். எதற்காக இடுகிறீர்கள் உங்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தார்கள். பூர்வகுடி மக்களை அழித்துவிட்டு அங்கே என்ன செய்யப் போகிறீர்கள் என்று தெளிவுபடுத்த வேண்டும். வீடுகளை இடிப்பதற்கு முன்பு அவர்களுக்கு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும். அதன் பிறகு வீடுகளை எடுக்க வேண்டும் இது குறித்து தமிழக முதல்வரிடம் பேசும்போது தெரியவில்லை என்கிறார்.

ஆனால் மாவட்ட வருவாய் துறையினர், காவல் காவல்துறையினர் மக்களை இரும்பு கரம் கொண்டு அடக்குகின்றனர். இதே நிலைமை நீடித்தால் தமிழக முழுவதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சர்வாதிகாரப் போக்கை கண்டித்து போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழகம் தான் சமூக நீதி, இட ஒதுக்கீடுபெற்று தரும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஆளுநர் தான்தோன்றித்தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்‌. தொடர்ந்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் வகையில் பேசும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று பேசினார்.