Advertisment

'இதுவரை முதல்வர் அங்கு போவாதது ஏன்?' - தமிழிசை கேள்வி

'Why hasn't the Chief Minister gone there yet?'-Tamizhisai question

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழக ஆளுநரை தமிழக பாஜகவின் நிர்வாகிகள் அனைவரும் இன்று சந்தித்தோம். சில கோரிக்கைகளை வைத்தோம். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த விஷச்சாராயத்தினால் மக்கள் இறந்து கொண்டிருப்பதும், பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதும், தமிழக அரசு அதை இட்டுச் செல்கின்ற முறையும் சரியாக இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் மாநில அரசைக் தாண்டி அவர்கள் எதையும் கண்டுபிடிக்கப் போவதில்லை. அதனால் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களது தீர்க்கமான கோரிக்கை.

அதேபோல் அங்கே சிகிச்சை பெற்று வருபவர்களில் பலபேர் கண் பார்வை இழந்து இருக்கிறார்கள். பலபேர் இன்னும் அபாயகரமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனையில் சிலர் அனுப்பப்பட்டுள்ளார்கள். எந்த மருத்துவமனையில் யார் சிகிச்சை பெறுவது என்பதில் கூட குழப்பம் நிலவி இருக்கிறது. புதன்கிழமை தான் இது கண்டுபிடிக்கப்பட்டது என்று வெளியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் செவ்வாய்க்கிழமையே அதிகமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறிவிட்டது. அதோடு மட்டுமல்லாது அடுத்த நாள் கலெக்டரோடு திமுகவை சேர்ந்த எம்எல்ஏவும் உட்கார்ந்து இதை மறைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு அமர்ந்து பொய் சொன்ன எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே அவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். ஆகவே இந்த பாரபட்சம் நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

Advertisment

அது மட்டுமல்ல அவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில் அந்தத் துறையின் அமைச்சரோ, முதலமைச்சரோ அங்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைக்காதது எந்த அளவிற்கு திராவிட மாடல்அரசு தமிழகத்தில் உள்ள மக்களை மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஜனநாயக நாட்டில் ஒரு குற்றம்,ஒரு பிரச்சனை மாநிலத்தில் நடந்தது என்றால் அதைக் கண்டிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது அவர்களை போராடக்கூட அனுமதிக்கவில்லை'' என்றார்.

kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe