எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் எதற்காக நடத்தப்பட்டது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்த முன்வந்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு சம்பவம் தொடர்பாக, டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் என முத்து அமுதநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த இரு வழக்குகளையும் இன்று நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். அப்போது, பதில் மனுவுக்கு பதிலாக அரசுத்தரப்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த அரசாணையை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன்? என்பது தொடர்பான விரிவான அறிக்கையை வருகிற 6-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

gunfire Sterlite Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe