Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் அரசுக்கு ஏன் தயக்கம்?  மு.க.ஸ்டாலின் 

Published on 04/06/2018 | Edited on 04/06/2018


 

mk

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  இன்று (04-06-2018) சட்டப்பேரவையில் ஆற்றிய உரைத்தொகுப்பு:
 

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,

தங்கள் மூலமாக இந்த சட்டமன்ற மரபு பற்றிய ஒரு விளக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இன்று 04.06.2018 தேதியிட்டு செய்தி வெளியீடு எண் – 354 என்ற அடிப்படையில், செய்தி – மக்கள் தொடர்புத்துறையின் மூலமாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பு என்னவென்றால், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் உள்ள சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய பரிசீலிக்கப்பட்டு, அந்த அடிப்படையில் 25.02.2018 அன்று வரை பத்தாண்டுகள் தண்டனை காலத்தை நிறைவு செய்திருக்கக்கூடிய ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதல்கட்டமாக 67 பேரை முன் விடுதலை செய்திருப்பது உள்ளபடியே வரவேற்கத்தக்கது. அதில் எந்தவித கருத்து மாறுபாடையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்க விரும்புவது, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டமன்ற நிகழ்ச்சியில் இதை முதலமைச்சர் முறையாக அறிவித்து இருக்க வேண்டும். எனவே, சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், இதை முன் கூட்டியே செய்தி வெளியீடாக வெளியிட்டு இருப்பது மரபுதானா என்பதை தங்கள் மூலமாக கேட்டு அமைகிறேன்.

(சபாநாயகர் பதில்)

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,

அமைச்சர் சொன்ன விளக்கத்தில் குறுக்கிட நான் விரும்பவில்லை. அதில் எங்களுக்கு எந்தவித கருத்து மாறுபாடோ, வேறுபாடோ கிடையாது. முழு மனதோடு அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நான் கேட்ட கேள்வி, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இப்படியொரு செய்தி இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே முன்விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்களா? அப்படி நடந்திருந்தால் இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இப்போதுதான் முதன்முறையாக விடுதலை செய்திருக்கிறீர்கள். எனவே, சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்தச் செய்திக்குறிப்பை சட்டமன்றத்திற்கு கொண்டு வராமல், சட்டமன்றத்துக்கு வெளியில் வெளியிடப்படுவது மரபுதானா என்பதை கேட்க விரும்புகிறேன்.

(சபாநாயகர் பதில்)

 மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,
 
இந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சி முக்கியமென்பதை யாரும் மறுத்திட முடியாது. அதில் எந்தவித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. அதே நேரத்தில், ஒரு தொழிற்சாலையால் கொடிய நோய்கள் பரவி, பொது நலன் பாதிக்கும் சூழ்நிலை வருகிறபோது, ஏற்கனவே தூத்துக்குடியில் தொடர்ந்து 100 நாட்கள் போராட்டம் நடத்தி, அந்த தொழிற்சாலை பற்றிய கருத்தை, நிலைபாட்டை மறுபரிசீலனை செய்கின்ற கடமை ஆளுகிற அரசுக்கு நிச்சயமாக உண்டு. மக்களுக்குத்தான் தொழில் வளர்ச்சியே தவிர, மக்களை பலியிட்டு ஒரு தொழில் வளர்ச்சியை நிச்சயமாக ஏற்படுத்திட முடியாது. ஸ்டெர்லைட் ஆலை எங்களுக்கு வேண்டாமென்று, தூத்துக்குடி மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? கோவா மாநிலத்தில் ஏற்கனவே இந்த ஆலைக்கான அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல, மராட்டிய மாநிலத்தில் இருந்து ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றப்பட்டு இருக்கிறது. ஆகவே, அந்த ஆலை தொடர்பாக அரசு தனது கைவசம் வைத்திருக்கக்கூடிய ஆதாரங்களோடு..

(சபாநாயகர் குறுக்கீடு)

கோரிக்கையை தான் இங்கு வைக்கவிருக்கிறேன். அந்த தாமிர உருக்காலை வேண்டவே வேண்டாமென்று ஒரு தீர்மானத்தை, இந்த அவையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற வேண்டுகோளை, அதே நேரத்தில் அமைச்சரவையிலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றிட இந்த அரசு முன்வரவில்லை என்று சொன்னாலும், இந்த சட்டத்தை ஏற்று, பொதுமக்களின் உடலுக்கும், உயிருக்கும் ஆபத்துகளை விளைவிக்கக்கூடிய ஸ்டெர்லைட் உள்ளிட்ட செம்பு உருக்காலைகள் தொடர்ந்து நிரந்தரத் தீர்வு காணக்கூடிய கொள்கை முடிவுகளை இந்த அரசு எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் இன்னொரு கோரிக்கை, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துவதற்காக, உச்ச நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, அந்த நிதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம் இருக்கிறது. அதற்கு வட்டியும் சேர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, அந்த வட்டியும், அசலும் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இந்த அவைக்கு அரசு தெரிவிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். அந்த நிதியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிதியை வழங்கிட வேண்டும். குறிப்பாக, துப்பாக்கிச்சூட்டினால் பலியாகி இருக்கும் 13 பேரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக முதலில் அறிவித்தீர்கள். அதன் பிறகு, 20 லட்சம் ரூபாய் என்று உயர்த்தி அறிவித்து இருக்கிறீர்கள். ஆனால், அந்த மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் பொறுப்பில் உள்ள, உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பின் அடிப்படையில் உள்ள அபராதத்தொகையான 100 கோடி ரூபாயிலிருந்து, அந்த 13 குடும்பங்களுக்கும் கூடுதலாக தலா 80 லட்சம் ரூபாய் வழங்கி, மொத்தம் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டுமென்று இந்த அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, படுகாயம் அடைந்தவர்களுக்கு நீங்கள் நிதியுதவி வழங்கி இருக்கிறீர்கள். அவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும், காயம் பட்டவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அந்த கூடுதல் தொகையை, ஸ்டெர்லைட் ஆலை சார்பில் அபராதமாக கொடுக்கப்பட்டு, வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து வழங்கலாம். அதில் எதுவும் பிரச்சினை வந்திடாது. அந்த நிதி சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தொகை. எனவே, அந்த மக்களுக்கும், அந்தப் பகுதியில் இருக்கின்ற சுற்றுப்புறச்சூழல், குடிநீர், மண் ஆகியவை மாசுபடுவதை தடுக்க செலவிடுவதில் எந்தவித தவறும் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏதோ சமூக விரோதிகளோ அல்லது விஷக்கிருமிகளோ அல்லது பயங்கரவாதிகளோ அல்ல. ஆகவே, அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை எல்லாம் உடனடியாக இந்த அரசு திரும்பப்பெற வேண்டும். அந்தப் பகுதியில் இன்னும் காவல்துறையினர் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபடும் சூழ்நிலையில், ஒரு பதட்டமான நிலை தொடர்கிறது. எனவே, அதனையும் இந்த அரசு உடனடியாக தடுத்து  நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இதுகுறித்து  முதலமைச்சர் அவர்களின் பதிலை தங்கள் மூலமாக நான் எதிர்பார்த்து அமைகிறேன்.


மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,

 முதலமைச்சர் இங்கு ஒரு விளக்கம் அளித்தார்கள். விளக்கத்துக்கு நன்றி. அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோமா, இல்லையா என்பது அடுத்த கேள்வி. அந்தப் பிரச்சினைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. யார் யாரெல்லாம் தடிகளை, கொம்புகள், உருட்டுக் கட்டைகளை எல்லாம் எடுத்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள், புகைப்படம் எல்லாம் இருப்பதாக அவரே தெரிவித்தார். காவல்துறையினர் மஃப்டியில் வேனின் மீது படுத்துக் கொண்டு, குறிபார்த்து சுடக்கூடிய காட்சிகளும் தொலைக்காட்சிகளில் வந்திருக்கின்றன, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவையும் முதலமைச்சரின் கவனத்துக்கு வந்திருக்குமென்று நான் கருதுகிறேன். ஆகவே நான் கேட்க விரும்புவது, இதே அவையில் நீட் தேர்வுக்காக தீர்மானம் போட்டிருக்கிறோம். ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்த நேரத்தில், நீதிமன்றத்தில் பிரச்சினை இருந்தபோது, இந்த அவையில் தீர்மானம் போட்டு அனுப்பி வைத்திருக்கிறோம். ஆலையை மூடுவோம் என்று அழுத்தம் திருத்தமாக நீங்கள் சொல்கிறீர்கள். சீல் வைக்கப்பட்டிருக்கிறது, திறக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால், அவர்கள் நீதிமன்றம் போகக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற சூழ்நிலையில், சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் காரணத்தால், நிரந்தரமாக மூடுவோம் என்ற நிலையில், இந்தப் பிரச்சினையை சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டு வந்து, நிறைவேற்றி தருவதற்கு இந்த அரசு முன்வருமா என்று கேட்டு அமைகிறேன்.

(சபாநாயகர் பதில்)

 மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஒரு திருத்தம், நான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற என்ன தயக்கம் என்று கேட்க விரும்பினேன். எனவே, அதை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனவே, மீண்டும் மீண்டும் நான் சொல்ல விரும்புவது, சட்டமன்றத்தில் அதை தீர்மானமாக கொண்டு வந்தால், சட்டப்படி நீதிமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை அவர்கள் இழந்து விடுகிறார்கள். எனவே, அதுபற்றி நான் விளக்கம் பெற விரும்புகிறேன்.
 

(சபாநாயகர் குறுக்கீடு)
 

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,


தி.மு.க. ஆட்சியிலும் நீதிமன்றத்துக்கு சென்று அவர்கள் தடை பெற்று இருக்கிறார்கள். அதேபோல, அ.தி.மு.க. ஆட்சியிலும் தடைபெற்று வந்திருக்கிறார்கள். எனவே, அந்தப் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவே, எதிர் கட்சியின் கடமை என்ற நிலையில், இங்கு அழுத்தம் திருத்தமாக கேட்கிறோம்.


(முதலமைச்சர் பதில்)
 

சார்ந்த செய்திகள்