ADVERTISEMENT

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒத்துழைக்கும் அரசு, திருச்சி பெல் நிறுவனத்துக்கு ஒத்துழைக்க முன்வராதது ஏன்? - நீதிமன்றம் சரமாரி கேள்வி

08:20 PM May 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் மறுபுறம் நாடுமுழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பேசுபொருளாகியுள்ளது. கடந்த அதிமுக அரசின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்காக மீண்டும் திறப்பதாக முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு ஒன்றில், தூத்துக்குடியில் தனியார் நிறுவனம் நிர்வகிக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க முழு ஒத்துழைப்பு அளிக்கும் மத்திய அரசு திருச்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன் வராதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த விரோனிகா மெரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய மூன்று பிளான்ட்கள் செயல்பட்டு வந்தது. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு திறன் கொண்டது. 2003ஆம் ஆண்டு முதல் ஆக்சிஐன் தயாரிப்பு நிறுத்தப்பட்டு, செயல்பாடு இல்லாமல் இருக்கிறது. எனவே சூழ்நிலையைக் கருதி பெல் நிறுவனத்தின் ஆக்சிஜன் தயாரிப்பு தொடங்கப்பட வேண்டும்' எனக் கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்சி பெல் நிறுவனத்தில் 140 மீட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா, பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கோரி எழுதிய கடிதம் தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர். தனியார் நிறுவனம் நிர்வகிக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஒத்துழைப்பு வழங்கும் மத்திய அரசு திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க முன் வராதது ஏன்? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தானே நேரடியாக தடுப்பூசிகளைத் தயாரிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து வரும் 19ஆம் தேதி விரிவான பதில்களை அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT