ADVERTISEMENT

‘திராவிட மாடல் என்பதில் மாடல் என்ற ஆங்கிலச்சொல் ஏன்?’ - நீதிமன்றம் கேள்வி

06:31 PM Jan 24, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“திராவிட மாடல் என்ற வார்த்தையில் ஏன் மாடல் என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுத்துகிறார்கள்; முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே” என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 1982 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி தூய தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். இந்த அரசாணையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறைக்கு செயலாளருக்கு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. உத்தரவிட்டு பல மாதங்கள் ஆன நிலையில், இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, இது தொடர்பான அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வேண்டும் என உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு தொடர்புடைய அலுவலகங்களில் பெயர்ப் பலகைகள் தமிழக அரசின் அரசாணைப்படி தமிழில் உரிய முறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அரசாணைப்படி தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வைப்பதில்லை. தனியார் நிறுவனங்களின் மீது தொழிலாளர் நலத்துறையே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், “தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையிலேயே கடுமையாகப் பாடுபட வேண்டும். சட்டக்கல்லூரி உட்பட கல்லூரிகளில் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். அதோடு வழக்கு தொடர்பாக குறிப்பு எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் சட்டப் புத்தகங்கள் தமிழில் கொண்டுவரப்பட வேண்டும். தற்போது 'திராவிட மாடல்' என்ற வார்த்தை பரிச்சயமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாடல் என்று ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த மாடல் என்ற சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே” எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “தமிழக அரசு ஆணையின்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப் பலகை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT