Skip to main content

எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம் ஏன்? மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

தன்னுடைய முதலீட்டை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மேற்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு வெண்கலத்தால் ஆன முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27, 2019) மாலை நேரில் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:


திமுக தலைவர் கலைஞர், ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்த நாட்டிற்கு பல்வேறு பிரதமர்களை உருவாக்கித் தந்திருக்கிறார். முதல் குடிமகன் என்று சொல்லப்படக்கூடிய ஜனாதிபதி உருவாவதற்கும் கலைஞர் காரணமாக இருந்திருக்கிறார். அதில் எல்லாம் அவர் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தாரோ இல்லையோ, அவரை ஒரு கலைஞராக உருவாக்கிய இடம் சேலம் தான் என்பதிலே அவருக்கு பெருமை உண்டு. அப்படிப்பட்ட சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது.


இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் படும் துன்பங்களை, அவர்களின் பிரச்னைகளை கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காத ஓர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில், நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை திமுகவினர் உடனடியாக நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். நானும் சென்று ஆறுதல் கூறினேன். நிவாரண உதவிகளைச் செய்தோம். எம்பி, எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் ஒதுக்கிக் கொடுத்தோம். அந்தத் தொகையைக் கொண்டு வேண்டிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று அரசிடம் கூறினோம்.

Why is Edappadi Palanisamy traveling abroad? MK Stalin's sensational speech in salem meeting


அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? ஸ்டாலின், விளம்பரத்திற்காக நீலகிரிக்குச் சென்று வந்திருக்கிறார்; 'சீன்' காட்டுவதற்காக போயிருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார். எனக்கு இனிமேல்தான் விளம்பரம் தேவையா? இனிமேல்தான் நான் 'ஷோ' காட்ட வேண்டுமா? இரண்டுமுறை சென்னை மாநகராட்சி மேயராக இருந்தவன். எம்எல்ஏ, உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதலமைச்சராக இருந்து பணிகளை செய்து இருக்கிறேன். எனக்கு விளம்பரம் தேவையில்லை. 


பலமுறை சொல்லி இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு இங்கிருந்து ஒரு சவால் விடுக்கிறேன். யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாக ஒரு கிராமத்திற்கு வருகிறேன். அங்குள்ள அத்தனை பேரும் என்னை அடையாளம் கண்டுகொள்வார்கள். நீங்கள் முதலமைச்சர். சேலத்தை விட்டு, எடப்பாடியை விட்டு, எந்த பாதுகாப்பும் இல்லாமல், ஒரு கிராமத்திற்கு வாருங்கள். யாராவது இவர்தான் எடப்பாடி பழனிசாமி என்று சொல்லட்டும் பார்க்கலாம். உங்கள் லட்சணம் இப்படி இருக்கு. நீங்கள் என்னை கொச்சைப்படுத்தி பேசுகிறீர்களா? இதுதான் ஒரு முதலமைச்சருக்கு அழகா? 


அதிமுக அரசு தொடர்ந்து எட்டு வருஷமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகிறது. இதுவரை மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்? கேட்டால், மாவட்டத்தை எல்லாம் பிரிக்கிறோம் என்பார்கள். பிரிக்கிறது தவிர வேறு ஏதாவது செய்கிறீர்களா? மத்திய அரசு மாநிலங்களைப் பிரிக்கிறது. அதிமுக அரசு, மாவட்டங்களைப் பிரித்துக் கொண்டிருக்கிறது.  

மாவட்டங்களைப் பிரிப்பதில் தவறு இல்லை. ஆனால் அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று ஆய்வு செய்து முறையாக பிரிக்க வேண்டும். மக்களவை தேர்தலில் ஏற்கனவே தமிழகம், புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளில் 39 இடங்களில் திமுக அணி வெற்றி பெற்றிருக்கிறது. நாற்பதுக்கு 39 பெரிதா? அல்லது நாற்பதுக்கு ஒரு மார்க் பெற்றது பெரிதா? ஏற்கனவே நடந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக, வேலூர் தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள்தான் கூடுதலாக பெற்றுள்ளதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். 


அதிமுக மட்டுமின்றி ஊடகத்துறையினரும் வேலூர் மக்களவை தேர்தலில் திமுக பெற்றது வெற்றி அல்ல என்கிறார்கள். அத்தோடு விட்டால் பரவாயில்லை. அதிமுக அடைந்தது தோல்வியும் அல்ல என்கிறார்கள். என்னடா இது...? ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி வெற்றிதானே?


அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது, 2016ல் நடந்த தேர்தலில் திமுகவைக் காட்டிலும் அதிமுக 1 சதவீதம் வாக்குகள்தான் கூடுதலாக பெற்று ஆட்சி அமைத்து இருக்கிறது. அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியினர் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 20 எம்எல்ஏக்கள் 4000 ஓட்டுக்கும் குறைவாகத்தான் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ 421 ஓட்டும், கரூர் விஜயபாஸ்கர் 441 ஓட்டும், ஆவடி பாண்டியராஜன் 1395, துரைக்கண்ணு 49 ஓட்டுகளும்தான் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். மானம், சூடு, சொரணை இருந்தால் நீங்கள் பெற்றதெல்லாம் வெற்றியே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?  

Why is Edappadi Palanisamy traveling abroad? MK Stalin's sensational speech in salem meetingஅதேபோல், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த கணக்கெல்லாம் அவர்களுக்கு தெரியாதா? ஆட்சியில் நீங்கள் உட்கார்ந்து இருக்கலாம். அது வேறு. விரைவில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் உங்கள் கணக்கு முடிந்து விடும். திமுக தலைவராக நான் பொறுப்பேற்று இன்றோடு (ஆக. 27) ஓராண்டு நிறைவு செய்திருக்கிறேன். என் தலைமையில் திமுக வளர்ச்சி அடைந்திருக்கிறதா? அல்லது அதிமுக வளர்ச்சி அடைந்திருக்கிறதா? என்ன சாதனை படைத்தேன்? ஆட்சிக்கு வருவதாகச் சொன்னீர்களே வந்தீர்களா? என்றுதான் ஊடகங்களில் தொடர்ந்து விவாதம் நடத்தி வருகின்றனர். 


அப்படி கேட்பவர்களுக்காக சொல்லிக் கொள்கிறேன். 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அதிமுகவுக்கு கிடைத்த எம்எல்ஏக்கள் மொத்தம் 133 பேர். இப்போது, 2019ல் அக்கட்சிக்கு இருப்பது 123 எம்எல்ஏக்கள்தான். பத்து எம்எல்ஏக்களை காணவில்லை. அப்படி எனில், அதிமுக செல்வாக்கு கீழே போய்விட்டதா இல்லையா? அப்போது திமுகவுக்கு 89 எம்எல்ஏக்கள் இருந்தனர். இப்போது, செஞ்சுரி. 100 ஆக உயர்ந்திருக்கிறது. ஆக, இந்த கணக்குக்கூட நீங்கள் போடவில்லையா? கணக்கை முறையாக கற்றுக்கொள்ளுங்கள். 


எடப்பாடி பழனிசாமி வெளிநாடு போகிறார். பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். எதற்காக இந்தப் பயணம்? முதலீட்டோடு வந்தால் பாராட்டுகிறோம். நான் கேட்கிறேன்... அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது 2015ம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். மொத்தம் 2.42 லட்சம் கோடி முதலீடாக கொண்டு வந்தோம் என்றார். என்ன முதலீடு வந்திருக்கிறது? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது? எத்தனை பேருக்கு வேலைவைய்ப்புகள் கிடைத்திருக்கின்றன என்று சட்டமன்றத்தில் திரும்பத் திரும்பக் கேட்டோம். அதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு சொன்னோம். இதுவரை பதில் கிடையாது. அதற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். 5 லட்சம் கோடி முதலீடு கொண்டு வந்தாக அறிவித்தார்கள். என்ன வந்தது? 


இதுமட்டுமின்றி, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், இடையில் சிறிது காலம் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதும், இப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதும் 110வது விதியின் கீழ், பல கோடி ரூபாய்க்கு தொடர்ந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அவற்றில் ஏதாவது ஒரு திட்டமாவது நடந்திருக்கிறதா?  


அதேபோல், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களின்போது பல கோடி ரூபாய்க்கு திட்டங்களை உறுதிமெழிகளாக வழங்கினீர்களே... இதுவரை ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? இந்த லட்சணத்துல வெளிநாடு? எதற்காக முதலீடு? தமிழ்நாட்டிற்கு முதலீடா? அல்லது உங்கள் முதலீட்டை அதிகமக்கிக் கொள்ள வெளிநாடா? என்ற சந்தேகம் வருகிறது.


இந்த ஆட்சி, மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஆட்சி. இவர்கள் ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள். இவர்கள் எதைச் செய்தாலும்  மத்தியில் உள்ள பாஜக கேட்காது. காரணம், அவர்கள் எதைச் செய்தாலும் இவர்களும் கேட்க மாட்டார்கள். தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும்போதும் அதிமுக எதுவும் கேட்காது. ஆட்சி இருக்கும்வரை அடிக்கிற கொள்ளையை அடித்துக்கொண்டே இருப்போம், செய்கின்ற ஊழலை செய்து கொண்டே இருப்போம் என்ற ரீதியில்தான் செயல்படுகிறார்கள். இந்த நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிக் கொண்டிருக்கும் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கு இதோ இங்கு சிலையாக நின்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் வழிநின்று பணியாற்ற உறுதி ஏற்கும் நிகழ்ச்சியாக இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய பாஜக அரசு முனைப்போடு செயல்படுகிறது. இந்த ஆலைக்கு ஆபத்து வந்திருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்தக்கோரி இதுவரை ஒரு கண்டன அறிக்கையாவது உண்டா? ஒரு தீர்மானம் உண்டா? முதலமைச்சராக இருப்பவர், தானே நேரடியாகச் சென்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து வாதாடி உருக்காலையை தனியாருக்குப் போவதை தடுத்து நிறுத்தி இருக்கலாம். இந்த லட்சணத்துல வெளிநாடு போகிறாராம். வெட்கக்கேடு...வெட்கக்கேடு... இந்த வெட்கக்கேடுக்கு முடிவுகட்ட தயாராக இருங்கள்.


இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்