Advertisment

ராஜலட்சுமியைக் கொன்ற மனித மிருகம் தினேஷ்குமார் மீது இன்னும் போக்சோ சட்டத்தைத் தொடுக்காதிருப்பது ஏன்? சீமான் கண்டனம்

se

சிறுமி ராஜலட்சுமி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள கண்டனம்:

Advertisment

’’அறத்தையும், ஒழுக்கத்தையும் போதித்த மேன்மை மிகுந்தத் தமிழ்ச்சமூகத்தில் பச்சிளம்பிள்ளைகளுக்கு எதிராக நடந்தேறும் பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களும், கொலைகளும் தாங்கொணாத் துயரத்தையும், பெரும் மனவேதனையையும் தருகிறது. சேலம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமி ராஜலட்சுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற அண்டைவீட்டுக்காரன் தினேஷ்குமார், அச்சிறுமியின் தலையை வெட்டிக் கொய்தச் சம்பவமானது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

Advertisment

ஆதியிலே பெண்களைத் தலைமையாக ஏற்று வந்த தமிழ்ச்சமூகம் இன்றைக்கு எந்தளவுக்குப் பாழடைந்திருக்கிறது என்பதற்கு இக்கோர நிகழ்வே பெரும் சான்றாகும். இச்சம்பவம் பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோரிடையே பெரும் கலக்கத்தையும், பயத்தையும் உண்டாக்கிறது. இதன்மூலம் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தப் பேரச்சமும், பெருங்கவலையும் வருவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாலேயே ஆட்படுத்தப்படுகிறார்கள் என்பதன் மூலம் இச்சமூகம் அறவுணர்ச்சி துளியுமற்ற குற்றச்சமூகத்தின் பெருத்த உருவமாக மாறியிருக்கிறது என்பது ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனியக் குனிய வேண்டிய வேதனையாகும்.

சிறுமி ராஜலட்சுமியை அவரது வீட்டின் அருகாமையில் வசித்துவந்த தினேஷ்குமார் எனும் கொடூரன் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றிருக்கிறான். அக்குழந்தை மறுக்கவே அரிவாளால் அக்குழந்தையின் தலையைத் துண்டித்து மிகக்கோரமாகக் கொண்டிருக்கிறான். நினைத்துப் பார்க்கவே பெரும் நடுக்கத்தைத் தரக்கூடிய இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்களை போகப்பொருளாக, வெறுமனே சதைப்பிண்டமாக, ஆண்களின் இச்சைத் தீர்க்கப் படைக்கப்பட்ட ஒரு உயிரிபோல எண்ணும் ஆணாதிக்கக் கொடூர மனநிலையின் விளைவாகவே இக்கொடுமைகள் நடந்தேறுகிறது. ஆகவே, இதற்கு எல்லாவற்றையும் சரிப்படுத்தி நெறிப்படுத்த வேண்டியது தேவையாகிறது. கல்வி, தனிமனித ஒழுக்கம், திரைப்படங்கள் யாவற்றையும் மறுசீர்திருத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண் பிள்ளைகளுக்கும் தொடுதல் (Good Touch, Bad touch) குறித்துக் கட்டாயம் கல்வி நிலையங்களில் போதிக்க வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே, சிறுமிகளுக்கு எதிரானப் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தில் இருக்கும் துளைகளையும், பிழைகளையும் பயன்படுத்தித் தப்பித்து விடுவதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஒடுக்கப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள்தான் அதிகப்படியாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதன் மூலம் ஆணாதிக்கத்தோடு, சாதிய ஆதிக்கத்திமிரும் இதனுள் இருக்கிறது என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை ராஜலட்சுமியைக் கொன்ற மனித மிருகம் தினேஷ்குமார் மீது இன்னும் போக்சோ சட்டத்தைத் தொடுக்காதிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவன் மீது உடனே போக்சோ சட்டத்தைப் பாய்ச்ச வேண்டும் எனவும், சிறுமிகளுக்கு எதிரானப் பாலியல் குற்றங்களைத் தடுக்க கடும் சட்டங்களும், விழிப்புணர்வுப் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.’’

seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe