
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அந்த குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு திமுக எதிர்ப்புதெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்தநிலையில், தற்போதையதிமுக தலைமையிலான அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பது திமுக இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வேறு ஒரு நிலைப்பாட்டை எடுப்பதாகவும் பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவே பாஜகவினர் போராட்டம் நடத்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

''அரசியலுக்காகவும், தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவும் மதுக்கடைக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தாதது ஏன்? கடந்த ஆட்சியில் கரோனாபாதிப்பு அதிகமாக இருந்தபோது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் எதிர்த்தோம். தற்பொழுது கரோனா குறைந்த காரணத்தால் டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என தெரிவித்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
Follow Us