தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் எப்பொழுது நடக்கும் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை இன்னமும் தயார் செய்து கொடுக்காததால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதிகளை இன்னும் முடிவு செய்யவில்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
தேர்தல் ஆணையம் ஜனநாயக அடிப்படையில் செயல்படாமல் அரசியல் நோக்கோடு செயல்படுகிறது. நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் டிசம்பர் 9 ல் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் மகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை மகராட்சி, நகராட்சிகள் தான் எனவே 15 நாட்களுக்குள் மகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை இன்னமும் தயார் செய்து கொடுக்கவில்லை. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டிய இன்னும் தயாராகாததால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதிகளை இன்னும் முடிவு செய்யவில்லை எனவே இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மூன்று வாரம் காலஅவகாசம் கொடுத்து வழக்கை ஒத்திவைத்தது.