Skip to main content

ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார் முதலமைச்சர்? மு.க.ஸ்டாலின்

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
edappadi palanisamy



கொடநாடு கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதலமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார். பேசுவதில் அவருக்கும் தெளிவில்லை; கேட்பவர்களுக்கும் தலைசுற்றுகிறது. என்ன தயக்கம் அவருக்கு இருக்கிறது? ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார் முதலமைச்சர்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

           கொடநாடு கொலைகள் – கொள்ளை விவகாரத்தில் எந்த வழியிலும் தப்பிக்க முடியாதபடி வசமாக மாட்டிக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு நாள் விடியும் போதும் விடிவேதும் கண்ணுக்குத் தெரியவில்லையே என்று விழிபிதுங்கி மனம் வெதும்பிக்கொண்டு இருக்கிறார். ஒரு நாட்டின் முதலமைச்சர் மீதே கொலை, கொள்ளை புகார்கள் சொல்லப்படுகிறது என்றால், நியாயமாகப் பார்த்தால் பதவி விலகி சட்டப்படி நியாயமான நேர்மையான விசாரணையை எடப்பாடி பழனிசாமி துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். அவரிடம் எல்லாம் நியாய தர்மங்களை எதிர்பார்க்க முடியாது; நேர்மைக்குத் தலைவணங்கும் குணமும் கிடையாது. ஆனால் உரிய பதிலைச் சொல்லாமல், திசைதிருப்பும் தந்திரத்தைச் செய்து நழுவிக்கொண்டு நாட்களைக் கடத்தி வருகிறார் முதலமைச்சர்.
 

       கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள்.
 

      2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.
 

        இந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதலமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார். பேசுவதில் அவருக்கும் தெளிவில்லை; கேட்பவர்களுக்கும் தலைசுற்றுகிறது. என்ன தயக்கம் அவருக்கு இருக்கிறது? ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார் முதலமைச்சர்?
 

      கனகராஜ் சொல்லித்தான் இதனைச் செய்தோம் என்று சயன் சொல்லி இருக்கிறார். அப்படியானால் கனகராஜ் உயிரோடு இருக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்கலாம் என்று எல்லோருக்கும் சந்தேகம் எழுவது நியாயமானது தானே?
 

     ‘’கொடநாட்டில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றவே கொள்ளை நாடகம் நடந்துள்ளது. ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வந்ததும் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லி இருக்கிறார் பத்திரிகையாளர் மேத்யூ. இதற்கும் முதலமைச்சர் பதில் சொல்லாமல் கழுவிய மீன்களில் நழுவிய மீனாக இருக்கிறார். “கொடநாடு எஸ்டேட்டில் கொலை நடந்ததில் இருந்தே யாரிடமும் தினேஷ் சரியாகப் பேசவில்லை. தற்கொலை செய்துகொண்ட நாளில் யாரிடமோ தினேஷ் அதிக நேரம் பேசினார்” என்று தினேஷ் உறவினர்கள் சொல்கிறார்கள். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?

 

mkstalin


 

     சயன், மனோஜ் ஆகிய இருவரின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லாத முதலமைச்சர், இவர்கள் இருவருக்கும் ஜாமின் வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர்கள் குறித்து வேண்டுமென்றே அவதூறு கிளப்பி வருகிறார். அந்த வழக்கறிஞர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைச் செய்தவர் போலக் காட்டி வருகிறார்.
 

     குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக அந்தக் குற்றவாளிக்கும் வழக்கறிஞருக்கும் தொடர்பு என்று சொல்ல முடியுமா? அதுவும் இந்த நாட்டின் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட ஒரு கிரிமினல் வழக்கு அது. சயனுக்கோ மனோஜ் என்பவருக்கோ கனகராஜ்க்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா? அவர்களைப் பாதுகாப்பது என்பது சட்டப்படியான நடவடிக்கை தான். அதனை எந்த வழக்கறிஞரோ, ஏன் திமுக வழக்கறிஞரே செய்திருந்தாலும் தவறு அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில் தான் உதவி செய்கிறார்களே தவிர, வேறு உதவிகள் செய்யவில்லை என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்; தனது கடந்த காலத்தையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்க வேண்டும். இது போன்ற சிறு பிள்ளைத்தனமான கண்டு பிடிப்புகளைச் செய்து, நாட்டு மக்களின் நகைப்புக்கு ஆளாவதை விட்டுவிட்டு விசாரணையை அவர் எதிர் கொள்ளத் துணிய வேண்டும்.
 

     எனக்கு எந்த பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக் கொண்டே, இது தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடு ஒரு முதலமைச்சர் மிரட்டுகிறார். தொலைக்காட்சி சேனல்களின் கேபிள் வயர்களை துண்டிப்பதாக வேறு தகவல்கள் வருகிறது. இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா?  யோக்கியர் என்றால் எதற்காக பயப்பட வேண்டும்? முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளையெல்லாம் வருசைப்படுத்தித் தொகுத்து ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம். குடியரசுத்தலைவருக்கோ மத்திய அரசுக்கோ அவர் அனுப்பினாரா, விசாரித்தாரா என்று தெரியவில்லை. இதுவரை அனுப்பாவிட்டால் இனியாவது அவர் அனுப்ப வேண்டும் என்று சட்டம் அறிந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள், நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
 

       எடப்பாடி பழனிசாமியின் இரண்டு நாள் பேச்சுகள் குற்றம் நடந்திருப்பதையும் அவர் நேரடியாகவே இதில் சம்பந்தப்பட்டு இருப்பதையுமே நிரூபிக்கின்றன. இன்னமும் ஒரு மணிநேரம் கூட முதலமைச்சர் பதவியில் நீடிக்க அருகதையற்றவராக அவர் ஆகிவிட்டார். இப்படிப்பட்ட ஒருவருக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா என்று தமிழக மக்கள் கேட்பது, அவர் செவிகளைத் செந்தேளாகக் கொட்டவில்லையா? இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.