Why is the bus station expansion delayed? The public who petitioned the Collector

Advertisment

கடலூர் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சேலம், கடலூர் செல்கின்ற சாலையில் நான்குமுனை சந்திப்பில் அமைந்துள்ள வேப்பூரில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். இந்த ஊர், தாலுகாவின் தலைநகரமாகவும் உள்ளது. அதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கிறார்கள். மேலும், தொலைதூர பேருந்துகள், கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. ஏற்கனவே இந்த ஊரில் சிறிய அளவில் பேருந்து நிலையம் இருந்தது. அதை விரிவாக்கம் செய்வதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

Advertisment

அதன் அடிப்படையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடைபெற்றுவந்தது. திடீரென கடந்த சில மாதங்களாக அந்தப் பணிநிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம், பேருந்து நிலைய கட்டுமானப் பணியினை தனிநபர் ஒருவர் தடுத்து நிறுத்திவந்துள்ளதாகவும் இதனால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் கிராம மக்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக நேற்று (24.09.2021) வேப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமையில் பொதுமக்கள் திரளாகச் சென்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து சார் ஆட்சியர் அமித் குமாரை சந்தித்தனர். அப்போது, வேப்பூர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அரைகுறையாய் நிற்கிறது.

அதை விரைந்து முடிக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் ஒருவர் பேருந்து நிலைய கட்டுமான பணி தடைப்படுவதற்கு காரணமாக உள்ளார். எனவே, இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையம், வேப்பூர் தாசில்தார்அலுவலகங்களில் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சார் ஆட்சியர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பேருந்து நிலைய பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று சார் ஆட்சியரிடம் விரிவாக எடுத்துக் கூறியதோடு புகார் மனுவையும் அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் அமித் குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக வேப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார்.