“உங்களுக்கு ஏன் அவசரம்?” - த.வெ.க.வுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

hc

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அஜித்குமார் மரணத்தைக் கண்டித்து சென்னை சிவானந்தா சாலையில் ஜூலை 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி த.வெ.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கை இன்று (04.07.2025) பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கோரி த.வெ.க. சார்பில் நீதிபதி வேல்முருகன் முன்பு காலையில் முறையிடப்பட்டது. அப்போது  நீதிபதி, “இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்குப் பதிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ‘குற்றம் செய்யாதீர்கள். மனைவியைக் கொடுமைப் படுத்தாதீர்கள்’ என விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இன்னும் ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்கள்தான் நடைமுறையில் உள்ளன. முதலில் அதைத் திருத்தக் கூறுங்கள். மனுவுக்கு எண்ணிடப்பட்டு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும்.

அதுவரை ஆர்ப்பாட்டத்தைத் தள்ளி வைக்கவும்” என நீதிபதி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மதியம் த.வெ.க தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிடுகையில், “வழக்கு எண்ணிடப்பட்டுவிட்டது. எனவே இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “காவல்துறைக்கு  நிறைய நிறைய வேலைகள் உள்ளது. உங்களுக்கு ஏன் அவசரம்?. உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா?. காவல்துறைக்கு எல்லாம் அழுத்தம் தர வேண்டாம்.

அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக கடிதம் தர வேண்டும். கூட்டம் நடத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் காவல் துறைக்கு உரியக் கால அவகாசம் தாருங்கள். போராட்டம் தொடர்பாக மீண்டும் காவல்துறைக்கு ஒரு மனு அளிக்க வேண்டும். காவல்துறையினரும் அந்த மனுவைப் பரிசீலித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” எனக் கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார். 

high court Tamilaga Vettri Kazhagam tvk thirupuvanam
இதையும் படியுங்கள்
Subscribe