Skip to main content

'கள்ளச்சாராய சாவுக்கு எதற்கு 10 லட்சம்? மறுபரிசீலனை தேவை' - உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
nn

அண்மையில் கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்நிலையில் 'தமிழக அரசு சார்பாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது எப்படி?' என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக முகமது கோஸ் என்பவர் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'கள்ளச் சாராயம் குடிப்பது என்பதே முதலில் சட்டவிரோதமான செயல். அதில் உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது. தீ விபத்து, பேருந்து விபத்து போன்ற விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் தான் கொடுக்கிறார்கள். ஆனால் இதற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள். இவ்வாறு சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவது தவறு. கள்ளச்சாராயம் அருந்துவதை இது ஊக்குவிக்கும் செயல். எனவே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். 

Why give 10 lakhs to a counterfeiter liquor? Reconsideration required'-Supreme Court Question

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், '10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகமான தொகை. எப்படி இவ்வளவு அதிகமான தொகையை இழப்பீடாக கொடுத்தீர்கள்' என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். இந்தத் தொகையை வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து அரசு என்ன சொல்ல விரும்புகிறது என அறிய அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா அமலுக்கு வந்தது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Liquor Prohibition Amendment Bill came into force CM MK Stalin announcement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால்  உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இனி கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் முதலிய குற்றச் செயல்களை முற்றிலும் ஒழிப்பதற்காகப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள 1937 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் புதிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படுமென முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 29-06-2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநர்  ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவிற்கு ஆளுநரால்  11-7-2024 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து இச்சட்டத்தின் கீழ் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஏற்கெனவே தண்டிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் தண்டிக்கப்படும் போது, அந்த நபரின் சிறைவாசம் முடிந்த பின்பு அவரது தற்போதைய வசிப்பிடப் பகுதியிலிருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்திற்கு அல்லது வேறொரு பகுதிக்குச் சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலுவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

மேலும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்திடும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா 2024 அமலுக்கு வந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Next Story

கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்; ஆட்சியர் அதிரடி !

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
11 tahsildar transferred in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். சின்னசேலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட  வட்டாட்சியர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரையும் பணியிடை மாற்றம் செய்த நிலையில் தற்போது புதிய ஆட்சியர் 11 வட்டாட்சியர்களை மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.