
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இன்று (23.04.2021) கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வடசென்னை அனல் மின் நிலைய விவகாரம் குறித்து கேட்டதற்கு அவர், “வடசென்னை அனல் மின் நிலைய நிலக்கரி குறைந்துள்ளதாக குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நிலக்கரி மாயமானது குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். இறுதிகட்ட ஆய்வுக்குப் பிறகே முழுமையான தகவல் வெளியிடப்படும். ‘நிலக்கரி மாயமானது குறித்து எங்களுக்குத் தெரியும்’ என முன்னாள் அமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால் ஏன் வெளியில் சொல்லவில்லை. தவறு என தெரிந்தும் யாரைக் காப்பாற்ற முயற்சி நடந்துள்ளது? கடந்த ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். இதேபோல் மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தன்னை சேர்க்க சதி என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்குப் பதில் கூறிய அவர், “தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படிதான் கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இவர்கள் விசாரணையைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? மடியில் கனமிருந்தால்தானே வழியைக் கண்டு பயப்பட வேண்டும்! இவர்களுக்கு மடியில் கனமுள்ளது. அதனால்தான் வழியைக் கண்டு பயப்படுகிறார்கள். சட்டத்துக்குட்பட்டுதான் விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றார்.