ADVERTISEMENT

எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து முதலில் வழக்கு தொடர்ந்தது யார்? திமுக மாஜி எம்எல்ஏ விளக்கம்!

11:38 PM Apr 10, 2019 | elayaraja


எட்டுவழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முதன்முதலில் திமுகதான் வழக்கு தொடர்ந்தது என்று அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா கூறினார்.

ADVERTISEMENT


இதுகுறித்து அவர் சேலத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

ADVERTISEMENT

எட்டுவழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே, இந்தத் திட்டம் விவசாயத்தை அழிக்கும் திட்டம் என்று கூறி, அத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக முதலில் அறிக்கை வெளியிட்டது. இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயியான திமுகவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் மூலம், உயர்நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்ததும் திமுகதான்.

இந்த வழக்கில் பாமக தரப்பு நான்காவது மனுதாரராகத்தான் வந்து சேர்ந்தது. இப்போது, இந்த திட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில், இத்தீர்ப்புக்கு தாங்கள்தான் காரணம் என்றும், தங்களால்தான் எட்டுவழிச்சாலைத் திட்டம் நின்றது என்பது போலவும் பாமக பேசி வருகிறது. இந்த வழக்கில் திமுக எதுவும் செய்யாதது போல, அன்புமணி ராமதாஸ் பேசுவது கண்டிக்கத்தக்கது.

திமுகவை விமர்சிக்க அன்புமணிக்கு எந்த தகுதியும் கிடையாது. வன்னியர்களுக்கு துரோகம் செய்த கட்சி பாமகதான். இப்படியெல்லாம் பேசுவது அக்கட்சியினருக்கு ஒன்றும் புதிதல்ல.

ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோதே, அவருடைய முயற்சிகளால் சேலம் ரயில்வே கோட்டம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை கொண்டு வரப்பட்டது. இவற்றையெல்லாம்கூட தான்தான் கொண்டு வந்ததாக அன்புமணி தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் அதே வழியில்தான் எட்டுவழிச்சாலைத் தீர்ப்பு விவகாரத்திலும் பேசி வருகிறார். அன்புமணி ராமதாஸின் பேச்சை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

விவசாயிகளுக்கு திமுக என்றும் ஆதரவாக இருக்கும். தீர்ப்பை எதிர்த்து ஆளுங்கட்சியினர் மேல்முறையீடு செய்தால், அதையும் எதிர்கொள்ள கட்சி தயாராக இருக்கிறது.


இவ்வாறு வீரபாண்டி ராஜா கூறினார்.


முன்னதாக, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக திமுக போராடியதற்கு நன்றி தெரிவித்து விவசாயிகள் அவருக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT