ADVERTISEMENT

வேலூர் தொகுதி வேட்பாளர்களாகப்போவது யார், யார் ?

04:06 PM Mar 08, 2019 | raja@nakkheeran.in

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ் போன்றவை அறிவித்து மனுக்களை வாங்கி முடித்துள்ளன. சில கட்சிகள் நாட்களை நீட்டித்து மனுக்களை வாங்கி வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த தொகுதி நம் கட்சிக்கு கிடைத்தால் நாம் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்கிற கோதாவில் ஒவ்வொரு கட்சியிலும் நிர்வாகிகள் குதித்துள்ளனர். அதன்படி வேலூர் பாராளமன்ற தொகுதி வேட்பாளராகப்போகும் கேட்பாளர்கள் யார் ?, யார் என விசாரணையில் இறங்கினோம்.

அமமுக

தற்போது சிட்டிங் எம்.பியாக செங்குட்டுவன் உள்ளார். இவர் ஓ.பி.எஸ் அணி, எடப்பாடி அணி என தாவி தாவி இப்போது தினகரன் அணியில் உள்ளார். மீண்டும் எனக்கு சீட்டே வேண்டாம் என சைலண்டாக உள்ளார். அமமுகவில் முன்னாள் அதிமுக மா.செ சிவசங்கரன், வாசு, முன்னாள் எம்.எல்.ஏ வேலூர் ஞானசேகரன், அணைக்கட்டு கலையரசு போன்றவர்களில் யாராவது ஒருவரை நிறுத்த தினகரன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

அதிமுக அணி

அமைச்சர் வீரமணி தனது அண்ணன் கே.சி.அழகிரிக்காக எடப்பாடியிடம் போராடுகிறார். முன்னாள் அமைச்சர் விஜய் எனக்கு தாங்க என கேட்டு வருகிறார். வேலூர் – திருவண்ணாமலை மாவட்ட பால்கூட்டுறவு சங்க தலைவர் வேலழகன் உட்பட சிலர் வேட்பாளர்கள் கோதாவில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த முறை இந்த தொகுதியில் தாமரை சின்னத்தில் நின்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போன ஏ.சி.சண்முகம் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். 90 சதவிதம் அவர் வேலூர் தொகுதியில் நிற்பது என்பது முடிவாகியுள்ளது என்கிறார்கள். அவரது ஆதரவாளர்கள்.

அதிமுக கூட்டணியில் பாஜக 5 தொகுதிகளை வாங்கியுள்ளது. வேலூர் தொகுதியை நமக்கு ஒதுக்கினால், நாமே நிற்கலாம் என்கிற ஆசையில் உள்ளார் முன்னாள் மேயர் கார்த்திகாயினி. மாவட்ட தலைவர் ஆம்பூர் வெங்கடேசனும் ஆசைப்படுகிறார்.

ஊசலாட்டத்தில் உள்ள தேமுதிக, அதிமுக அணியில் இணையும் பட்சத்தில், இந்த தொகுதி மீது அவர்களுக்கு ஆசையுள்ளது. காரணம் விஜயகாந்த் மச்சான் சுதிஷ் பிறந்த கிராமம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குள் வருகிறது. அதனால் இங்கு போட்டியிட்டால் சரியாக இருக்கும் என்பதால் அவர் விரும்புகிறார் என்கிறார்கள். அவர் இல்லாத பட்சத்தில் மா.செ ஸ்ரீதர் கேட்கும் முடிவில் உள்ளார் என்கிறார்கள்.

திமுக அணி

திமுகவில், திமுக பொருளாளர் துரைமுருகன் தனது மகன் கதிர்ஆனந்த்க்கு சீட் தாருங்கள் என தலைவர் ஸ்டாலினிடம் கேட்டு வருகிறார். திமுக மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் எம்.பி. முகமதுசகி தனக்கு வேண்டும்மென கேட்கிறார். இதற்கிடையே தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள், இஸ்லாமிய பிரமுகர்களை சந்தித்து துரைமுருகன் பேசிவருவது கதிர்ஆனந்த் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள் அவரது கட்சியிலேயே.

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏணி சின்னத்தில் நிற்கும் அந்த கட்சி வேலூர் தொகுதி வேண்டும் எனக்கேட்கிறது. அந்த கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கும் பட்சத்தில் அதே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அப்துல்பாசித், புதுக்கோட்டையை சேர்ந்த வேலூர் தொகுதியின் முன்னாள் எம்.பி அப்துல்ரகுமானை தேர்வு செய்யலாமா என அரசியல் குழுவில் விவாதித்துவருகின்றனர்.

திமுக கூட்டணியில் ஒரு வேளை காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் முன்னாள் எம்.பி ஜெயமோகன் மகனும், சிதம்பரம் ஆதரவாளருமான விஜய் இளஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் அஸ்லம்பாஷா போன்றவர்கள் கேட்கும் முடிவில் உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT