Skip to main content

தவறான அறுவை சிகிச்சைகளுக்கு யார் பொறுப்பு? சுகாதார அமைச்சரின் மாவட்ட மக்கள் அதிர்ச்சி

doctor

  

 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் தான் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு அடுத்து வந்த முதலமைச்சர் ஜெயலிதாவால் நிதி ஒதுக்கப்பட்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் திறந்து வைக்கப்பட்ட புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஆனால் சொந்த மாவட்டத்தில் இப்படி தொடரும் பிரச்சனைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்திற்கு போகிறதா என்பது தான் கேள்விக்குறி. 

 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு படுக்கையில் இருந்த பெண்ணிடம் எந்த ஊர்? எதற்காக வந்தார்கள் நல்லா கவனிக்கிறார்களா என்று கேட்டார். ’’அய்யா நான் உங்க தொகுதி தான். காய்ச்சல்னு வந்தேன் காலையில வந்தது. இன்னும் எந்த வைத்தியமும் செய்யல இந்த பெட்டுல இருக்கிறேன்’’ என்று பதில் சொன்னார். கூட இருந்த மருத்துவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நிர்வாகத்தை கடிந்து கொண்டார். 


    அதன் பிறகும் இப்படி பல பிரச்சனைகள். இந்த பிரச்சனைகள் எல்லாம் அமைச்சர் கவனத்திற்கு சென்றால் நடவடிக்கை எடுத்திருப்பார் என்று சொல்லும் மருத்துவமனை வட்டாரத்தில் அமைச்சர் கவனத்திற்கு போகாமல் தடுத்துவிட்டு அமைச்சர் வரும் போது பொன்னாடை அணிவித்து மனம் குளிரச் செய்து அனுப்பிவிடுகிறார்கள். அதனால் அவரும் கண்டுக்கல. அதன் விளைவு தான் இப்ப 2 பெண்களுக்கு தவறான அறுவைச் சிகிச்சை வரை வந்துவிட்டது என்றனர்.

 

    தவரான அறுவை சிகிச்சையா? என்ற நமது கேள்விக்கு..  ஆமா வார்டு நம்பர் 502 ல போய் பாருங்க என்றனர். 
    ஆலங்குடி அருகில் உள்ள செம்பட்டிவிடுதி முத்தையா மனைவி மகேஷ்வரிக்கு 6 மாதம் முன்னால் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்ட பிறகு வலியால் அவதிப்பட்டது ஒரு பக்கம் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இருந்து சலம் வந்து கொண்டே இருக்க தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது தான் தெரிந்திருக்கிறது பிரசவ அறுவை சிகிச்சையின் போது ரத்தம் துடைத்த பஞ்சை வயிற்றில் வைத்து தைதுவிட்டதால் சலம்பிடித்து வெளி வந்தது தெரியவந்தது. இப்ப மறுபடி அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சு அகற்றப்பட்டு பெட்ல இருக்கிறார்.

 

    அடுத்த பெட்ல கிடக்கிற ஆதனக்கோட்டை பக்கம் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி சுப்பிரமணியன் மகள் திவ்யபாரதிக்கு நெஞ்சுல கட்டி இருக்குன்னு 24 ந் தேதி அட்மிஷன் ஆனார். 30 ந் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. நினைவு திரும்பிய திவ்யபாரதி நான் நெஞ்சுக்கு மேல கட்டி இருக்குன்னு சொன்னேன். ஆனா நெஞ்சுக்கு கீழே அறுத்திருக்கே என்று வார்டுக்கு வந்த பெண் மருத்துவரிடம் சொல்ல அந்த பெண் மருத்துவரும் திவ்யா சொன்ன இடத்தில் கை வைத்து பார்த்துவிட்டு ஆமா மாற்றி அறுத்துட்டாங்க. மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சை செஞ்சால் சரியாகிடும் என்று சொல்ல பயத்தில் நடுங்கி போய் இருக்கிறார் திவ்யா. 


    நாம் இந்த தகவல்களை வெளியே கொண்டு வந்த சிறிது நேரத்தில் அங்கு கூடிய மருத்துவர்கள் குழு மகேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு சுத்தம் செய்யாமல் தையல் போட்டதால் சீல் வந்தது. இப்ப மறுபடி அறுவை சிகிச்சை செய்து சுத்தம் செய்தாகிவிட்டது. திவ்யபாரதிக்கு மேலே உள்ள கட்டியை அகற்ற தான் கீழே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதை அறியாமல் தவறான சிகிச்சை என்று சொல்லிவிட்டார்கள் என்றனர். 

 

    எது எப்படியோ.. ஆனால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர் கவனித்தால் சரி தான். சொந்த மாவட்டத்தை அமைச்சர் கவனிக்கவில்லையே என்ற பொதுமக்களின் ஆதங்கம் குறையும்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்