Advertisment

யாருக்கு லாபம்? எடப்பாடிக்கா... விவசாயிகளுக்கா? அன்புமணி ராமதாஸ்

மேட்டூர் அணையை தூர்வாருவதால் யாருக்கு லாபம்? எடப்பாடிக்கா... விவசாயிகளுக்கா? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையை தூர்வாரியதால் ஏற்பட்ட நன்மைகள், ஏற்படப்போகும் நன்மைகள் குறித்து நீண்ட விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறிய தகவல்கள் பொய்யானவை; புள்ளிவிவரங்கள் தவறானவை என்பது தான் உண்மை. தவறான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.

மேட்டூர் அணை 84 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு முதல் தூர்வாரப்படுவதால் அணையின் கொள்ளளவு 10 முதல் 15 டி.எம்.சி. அளவுக்கு அதிகரிக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, மேட்டூர் அணையிலிருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்றதால் சேலம் மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். இவற்றில் எதுவுமே உண்மையில்லை. மேட்டூர் அணையை எவ்வளவு ஆழத்திற்கு தூர் வாரினாலும் அதன் கொள்ளளவை 15 டி.எம்.சி. அளவுக்கு அதிகரிக்க முடியாது என்பது தான் யதார்த்தம் ஆகும்.

மேட்டூர் அணையை தூர்வாருவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து ஏராளமான போராட்டங்களையும் பா.ம.க. நடத்தியுள்ளது. ஆனால், அணையை தூர்வாருவதில் நடைபெறும் முறைகேடுகள் காரணமாக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்பதே உண்மை.

Advertisment

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் மேட்டூர் அணையை தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு மே 28-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தக் காலத்தில் மொத்தம் 2 லட்சத்து 9386 கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் தூர்வாரப்பட்டது. அதனால் அணையின் நீர் கொள்ளளவு 7 மில்லியன் கன அடி, அதாவது 0.007 டி.எம்.சி. அளவுக்கு அதிகரித்தது. இதே வேகத்தில் அணை தூர்வாரப்பட்டால் ஒரு டி.எம்.சி. கொள்ளளவு அதிகரிப்பதற்கு 143 ஆண்டுகள் ஆகும். உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, அணையை தூர்வாருவதன் மூலம் அதன் கொள்ளளவை 15 டி.எம்.சி. வரை அதிகரிக்க முடியும் என்பது மக்களையும், உழவர்களையும் ஏமாற்றி முட்டாள்களாக்கும் செயல் ஆகும்.

உண்மை என்னவென்றால் மேட்டூர் அணையை தூர்வாரும் பணி கடந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும் வகையில் நடைபெறவில்லை என்பது தான். தூர்வாரும் பணி என்பது மொத்தம் 59.25 சதுர மைல் பரப்பளவுக்கு விரிந்து கிடக்கும் நீர்த்தேக்க பகுதி முழுவதிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அணைப்பகுதியில் தரமான வண்டல் மண் கிடைத்த இடங்களில் மட்டுமே தூர்வாரப்பட்டது. அதுவும் ஒரே சீராக மண்ணை அல்லாமல் பல இடங்களில் 30அடி ஆழத்திற்கு கிணறு போலத் தோண்டி மண் எடுக்கப்பட்டது. சுருக்கமாகக் கூறினால் மேட்டூர் அணையில் நடைபெற்றது தூர் வாரும் பணி அல்ல. அது வண்டல் மண் கொள்ளை ஆகும். அணையிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண் மேட்டூர் மற்றும் அதையொட்டியப் பகுதிகளில் விளைநிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, எடப்பாடி பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் நிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் செங்கல் சூளைகளுக்கு மண் விற்பனை செய்யப்பட்டது. இதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றது.

நடப்பாண்டில் மேட்டூர் அணையில் தூர் வாருவதாக இருந்தால், அதற்காக உழவர் சங்கப் பிரதிநிதிகள், வேளாண்மை சார்ந்த தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில் தான் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலங்களில் வலது கரை பகுதியில் மட்டும் தான் தூர்வாரப்பட்டது. இனிவரும் காலங்களில் தருமபுரி மாவட்டத்தையொட்டிய இடது கரை பகுதிகள் உட்பட ஒட்டுமொத்த நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அது தான் உழவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

அதுமட்டுமின்றி, தடுப்பணைகள் கட்டும் திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு எங்கெங்கு எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன; அந்தப் பணிகள் இப்போது எந்த நிலையில் உள்ளன என்பதையும், இனி வரும் ஆண்டுகளில் எங்கு தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன என்பதையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்க வேண்டும். இல்லாவிட்டால் இவற்றை ஊழல் செய்வதற்கான வெற்று அறிவிப்பாகத் தான் பார்க்க வேண்டியிருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

Mettur Dam Farmers Edappadi Palaniasamy profitable Who anbumani ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe