விருதுநகரில் ‘சங்கக் கட்டிடம் யாருக்கு?’ என்பதில் அரசு ஊழியர் சங்கத்தினர் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, காவல்துறையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் சங்கத்துக்காக எங்குமே நடக்காத அரசு ஊழியர்கள் கைகலப்பு விருதுநகரில் நடந்தது ஏன்? களமிறங்கினோம்,  அரசு ஊழியர்கள் தரப்பிடமிருந்து தகவல்களைத் திரட்டினோம்.   விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் 2007ல் கட்டப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களிடம் வசூலித்தும், விஐபிக்களிடம் நன்கொடைகள் பெற்றும் கட்டப்பட்ட இச்சங்கக் கட்டிடத்தின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி ஆகும்.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்திலிருந்து 1984ல் பிரிந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடங்கப்பட்டது. சங்கத்தின் பதிவு எண் 237/1985. சிஐடியு மற்றும் சிபிஎம் அரசியல் சார்ந்து இயங்கிவரும் இச்சங்கத்திற்கு சென்னை பார்த்தசாரதி கோவில் அருகே பல கோடிகள் மதிப்புள்ள மாநில சங்கக் கட்டிடம் உள்ளது. புதுப்பிக்கப்பட்ட மாநில சங்கக் கட்டிடத்தை 2002ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். சமரசம் என்பதே இல்லாமல் ஊழியர்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பாக மாநில நிர்வாகிகளால் வழிநடத்தப்பட்டது இச்சங்கம். ஆனால்,  பொதுச் செயலாளர் அன்பரசு பொறுப்பேற்றதும் போராட்ட குணத்திலிருந்து விலகிச் சென்றது. இதனை விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தினர். இம்மாவட்டத்தோடு மேலும் சில மாவட்டங்களும் கைகோர்த்தன. இந்நிலையில், 2021ல் விருதுநகர் மாவட்ட மையத்தை மாநில மையம் கலைத்தது. இதை எதிர்த்து ச.இ.கண்ணனின் வழிகாட்டுதல் மூலம் நீதிமன்றம் சென்று, மாவட்ட மையத்தைக் கலைத்ததற்கு தடையுத்தரவு பெறப்பட்டது. அதனால், 2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் மாநில மையத்தால் தலையிடமுடியவில்லை.  

இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அன்பரசுக்கு எதிரான மனநிலையில் இருந்தவர்கள் ஒன்றுசேர்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் என்ற அமைப்பைப் புதிதாகத் துவங்கினர். இரண்டுக்கும் உள்ள பெயர் வேறுபாடு, ஊழியர் என்பதில் ‘கள்’ சேர்த்து ஊழியர்கள் ஆனதுதான். மாநில பொறுப்பு வகித்துவந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, சுப்பிரமணி, கண்ணன் போன்ற அனைவரும் தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். பொதுவாக ஒரு சங்கம் பதிவாகி பதிவு எண் பெற்றுவிட்டால், ஒவ்வொரு வருடமும் நான்கு முறை நிர்வாகிகள் கூட்டமும் ஒருமுறை மாநில பொதுக்குழு கூட்டமும் நடத்தி, வரவு-செலவு, உறுப்பினர் சேர்க்கை-நீக்கம் போன்றவை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனைச் சங்கப் பதிவு உள்ள மாவட்டத்தில் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். பல வருடங்களாக இதைப் பண்ணவில்லை என்பதை மாநிலப் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் தாமதமாகவே அறிந்தனர். சரிபண்ண முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை. அதனால், விதிகளின்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கலைக்கப்பட்ட சங்கம் ஆனது.  

இச்சங்கத்திற்கு சென்னையில் பலகோடி மதிப்புள்ள மாநில கட்டிடம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலகோடி மதிப்புள்ள காலி மனை என பல மாவட்டங்களிலும் சொந்தக் கட்டிடங்கள் உள்ளன. மதுரை, சென்னை சில்க்ஸ் அருகே இரண்டு மாடிக் கட்டிடத்தில் அலுவலகம் செயல்படுகிறது.  இவ்வனைத்துச் சொத்துகளின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ.500 கோடி ஆகும். எனவே, இந்த விஷயத்தில் சிபிஎம் கட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு, சங்கத்தின் பழைய பதிவு எண்ணைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.  இச்சங்கத்திற்கு மாநிலத்  தலைவராக இருந்த கங்காதரன்,  ஓய்வுக்குப் பிறகு புரட்சிகர தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து, அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்தார். இவருடைய வழிகாட்டுதல்படி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஒவ்வொரு துறைவாரியாக தங்களது ஆதரவுச் சங்கத்தை உருவாக்கிக்கொண்டனர். ஆனாலும், சிபிஎம் ஆதரவு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை இவர்களால் பின்னுக்குத் தள்ளமுடியவில்லை.  

விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம், சொத்து விதிகளின்படி மாநில பொதுச்செயலாளர் பெயரில் இருப்பதால், புதிய அமைப்பை உருவாக்கிய கண்ணன் அணியை சட்டப்படி வெளியேற்றாமல், 12-7-2025 அன்று சங்கக் கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதனைத் தொடர்ந்து கண்ணன் அணியினரும்  கூட்டமாக வந்தனர். இருதரப்பினரும்  மோதிக்கொண்டார்கள். காவல்துறையும் சங்கக் கட்டிடத்துக்குள் நுழைந்து கைது நடவடிக்கை மேற்கொண்டது. 2007ல் இச்சங்கத்தினை விருதுநகர் முத்துராமலிங்கநகரில் தொடங்கியதும் அங்குள்ள  மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால், இலவசப் போட்டித் தேர்வு நடத்தினார்கள். அதனால் ஆயிரத்துக்கும்   மேற்பட்டவர்களுக்கு அரசுப் பணி கிடைத்தது. தற்போது, இரண்டு பிரிவுகளாக மோதிக்கொண்டு தரம் தாழ்ந்து தகாத வார்த்தைகளைப் பேசியதும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்தச் சங்கம் நமது பகுதியில் ஏன் இருக்கவேண்டும்? என்று அப்பகுதியில் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. 

விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் இரதரப்பினரிடையே இணக்கமான சூழல் ஏற்படாததால், சட்டம் ஒழுங்கினைப் பராமரித்திடும் வண்ணம் சங்கக் கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் உரிமைக்காகப் போராட வேண்டிய சங்கத்தினர், பதவிக்காகவும் சங்கச் சொத்துக்காகவும் அடித்துகொள்வது வேதனை அளிக்கிறது.