
திருநெல்வேலியில் அமைந்துள்ள ‘இருட்டுக் கடை’ என்ற அல்வா கடை இந்திய அளவில் புகழ்பெற்றது ஆகும். இந்த கடையை 1900ஆம் ஆண்டு ராம்சிங் என்பவர் நிறுவினார். அதன் பின்னர் அவருடைய 4 மகன்களில் ஒருவரான கிருஷ்ண சிங் என்பவர் இந்த கடையை நிர்வகித்து வந்தார். அவருக்கு பின் அவருடைய வாரிசு தாரர்களாக இருக்கக்கூடிய கவிதா சிங் என்பவர் தற்போது கடையை நிர்வகித்து வருகின்றனர். அதே சமயம் அவருடைய அண்ணன் நயன் சிங் என்பவர் ஏற்கனவே தனக்கு இருட்டுக் கடையில் உரிமை இருப்பதாக பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த சூழலில் கிருஷ்ண சிங்கின் அண்ணனான உதய சிங்கினுடைய பேரன் பிரேமானந்த சிங் இருட்டுக் கடை தனக்குத்தான் சொந்தம் என பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பொது அறிவிப்பில், “கவிதா மற்றும் நயன் சிங் ஆகியோர் இருட்டுக் கடையில் ஊதியம் பெற்று பணியாற்றும் ஊழியர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் கடைக்கும் சொந்தமில்லை. ஆண் வாரிசு என்ற அடிப்படையில் கடை தனக்கே (பிரேமானந்த சிங்) சொந்தம். இவர்கள் இருவருக்கும் (கவிதா மற்றும் நயன் சிங்) கடை சொந்தமில்லை.
மேலும் இது தொடர்பாகக் கடந்த 2023ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறேன். அந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே கடையில் கவிதா மற்றும் நயன் சிங்கிற்கு உரிமை இல்லை. இவர்கள் கடை தொடர்பாக சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக்கூடிய முடிவுகளில் அவர்கள் தலையிட முடியாது” என்ற அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் இருட்டுக்கடையை உரிமை கொண்டாடி 3வது நபராக ஒருவர் பொது அறிவிப்பு வெளியிட்டடிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இருட்டுக்கடை அல்வா குழும உரிமையாளராக உள்ள கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா கோவையைச் சேர்ந்த தனது கணவர் பல்ராம் சிங் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக நெல்வேலி கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.