Skip to main content

என்னோட குழந்தைக்கு தந்தை யார்? - காவல் நிலையத்தில் கைக்குழந்தையுடன் தஞ்சமடைந்த பெண்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

 Who is the father of my child?-Woman sheltered in police station with infant

 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த இளம்பெண் ஒருவர் கையிலிருந்த குழந்தையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது அவர் கொடுத்த புகார் மிகவும் விசித்திரமாக இருந்தது.

 

பிபிஏ பட்டதாரியான அந்த பெண் கரோனா ஊரடங்கு காலத்தில் அவரது செல்போனுக்கு வந்த தவறான அழைப்பால் இசக்கிமுத்து என்ற லாரி ஓட்டுநருடன் பேசி வந்துள்ளார். நாளடைவில் இவர்களது நட்பு காதலில் முடிந்தது. நெருங்கிப் பழகி வந்துள்ளனர். பின்னர் அவர் தன்னை வேண்டாம் என்று விட்டுச் சென்ற பிறகு இசக்கிமுத்துவின் நண்பரிடம் நம்பி பழகியதாகவும் அவரும் நம்ப வைத்து விட்டுச் சென்றதால், இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இசக்கிமுத்துவும், இரண்டாவது காதலனும் மீண்டும் பழகியதால் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து வீட்டிலேயே பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த தகவலை மூன்று காதலர்களுக்கும் செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் மூன்று பேரும் இந்த குழந்தை தங்களுக்கு பிறக்கவில்லை என்று மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். மூன்று பேரின் பேச்சை நம்பி பழகி தற்பொழுது குழந்தையுடன் அவதிப்படுகிறேன். அவமானம் தாங்காமல் என்னுடைய அம்மா உயிரிழந்து விட்டார். எனவே தனது குழந்தையின் தந்தையை கண்டுபிடித்து தர வேண்டும் எனக் கண்ணீர் மல்கப் புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரைப் பெற்ற மணியாச்சி டிஎஸ்பி யோகேஸ்வரன், அந்த பெண்ணிற்கு உதவி செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீசார் குழந்தை பராமரிப்பு செலவுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்து குழந்தைக்குத் தேவையான ஆடைகளை வாங்கி குழந்தையை போலீசாரே பராமரித்து வருகின்றனர்.

 

முதல் காதலரான இசக்கிமுத்துவை போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைக்கு அவர் காரணமல்ல எனத் தெரிந்து இசக்கிமுத்து அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது காதலர்களை போலீசார் தேடி வந்த நிலையில், மூன்றாவது காதலனான இளைஞன் கஞ்சா வழக்கில் சேலம் சிறையில் சில மாதங்களாக அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இரண்டு பேரில் யார் தந்தை என அறிய போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.