Advertisment

‘யாரை ஏமாற்ற முயல்கிறது ஆவின் நிறுவனம்?’- அன்புமணி ராமதாஸ் கேள்வி!

Who is the company trying to deceive Anbumani Ramadoss question

Advertisment

சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பால் விலை ஏற்றமா?. யாரை ஏமாற்ற முயல்கிறது ஆவின் நிறுவனமும் திராவிட மாடல் அரசும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் வரும் 18ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பச்சை உறை பாலின் விலை லிட்டருக்கு ரூ.11 விலை உயர்த்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தேன். அது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆவின் நிறுவனம், சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி ரூ. 25 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு வினோதமான காரணத்தைக் கூறியிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் விளக்கம் நகைப்பைத் தான் ஏற்படுத்துகிறது.

ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விட்டு, அதற்கு சில்லறைத் தட்டுப்பாடு தான் காரணம் என்பது மக்களை முட்டாள்களாக்கும் செயல் ஆகும். தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22க்கு விற்கப்படுகிறது. சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கும், ஆவினுக்கும் இருந்திருந்தால் அதன் விலையை 500 மிலி ரூ.20 என்று குறைத்திருக்கலாம் அல்லது பாலின் அளவை 550 மிலியாக உயர்த்தி ரூ.25 என விலை நிர்ணயித்து இருக்கலாம். ஆனால், பாலின் அளவையும் 50 மிலி குறைத்து விட்டு, விலையையும் ரூ.3 உயர்த்துவது எந்த வகையில் நியாயம்?. மக்களை ஏமாற்றும் வகையில் மிகப்பெரிய மோசடியை செய்து விட்டு, அதை நியாயப்படுத்துவதற்காக மேலும், மேலும் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையிலும் நியாயமல்ல. சில்லறைத் தட்டுப்பாடு என்ற ஒரு காரணம் போதாது என்று சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டும் , அவர்களுக்கு சற்று அதிக கமிஷன் தரும் நோக்குடனும் விலை உயர்த்தப்படுவதாகவும் ஆவின் கூறியிருக்கிறது.

அனைத்து வகை பால்களுக்கும் செய்யப்படும் குளிர்சாதன செலவினங்கள் தான் ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலுக்கும் ஏற்படும். பாலின் விற்பனை விலையை உயர்த்த அது எந்த வகையிலும் காரணமாக இருக்காது. சில்லறை விற்பனையாளர்களுக்கு கூடுதல் கமிஷன் என்பது, அதிக விலை கொண்ட பாலை முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்வதற்கான ஊக்குவிப்பே தவிர அது நியாயமான காரணம் அல்ல. ஆவின் நிறுவனத்தின் இந்த விளக்கங்களையெல்லாம் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

pmk milk aavin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe