/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court-in_78.jpg)
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, குழு அமைத்த அரசின் இந்த அறிவிப்பானை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசின் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில், ஏ.கே.ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். தமிழக அரசின் இந்த அறிவிப்பானைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை எனக் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழக அரசு மக்கள் கருத்துக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பினார். மேலும், விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாகக் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து, மத்திய அரசு தரப்பில், அரசியல் சாசனம் 162 வது பிரிவு சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் சட்டம் இயற்றலாம் ஆனால் மத்திய - மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆய்வுக் குழுவின் அறிக்கை மூலமாக மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களின் நிலைமை தெரிய வரும் என்றும் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை மூலமாக நீட் தேர்வு நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வர முடியும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராகவும் இல்லை எனத் தெரிவித்தார்.
குழு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதைப் பயன்படுத்தி, பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் மத்திய அரசிடம், மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்கக் கோரலாம்.
அதேபோல நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் பள்ளி பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம். குழு நியமனம் என்பது வீண் செலவு எனக் கூறமுடியாது. மக்கள் கருத்துக் கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)