Skip to main content

நான் யார் யாரோடு பழகணுமுன்னு நீ சொல்லாத... இளம் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
நான் யார் யாரோடு பழகணுமுன்னு நீ சொல்லாத... இளம் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவர்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ் (வயது-31). இவர் கோவையில் ஒரு பேக்கரியில் சப்ளையராக வேலைப் பார்த்து வருகிறார்.

இவர் தம்மம்பட்டியில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், திருச்சி மாவட்டம் பாதர்பேட்டை பகுதியை சேர்ந்த மேகலா (வயது-25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரு வீட்டு பெற்றோர்களும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவர்களின் எதிர்ப்பையும் மீறி இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரியதர்சினி என்ற 7-வயது பெண் குழந்தை உள்ளது.

திருமணம் முடிந்து மேகலாவுக்கு குழந்தை பிறந்த பின்னர் மேகலாவுக்கும், கணேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மேகலா தன்னுடைய தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். பாதர்பேட்டையில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் இருந்து கொண்டே மகள் பிரியதர்சினியை அங்குள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். மேகலாவும் நர்சிங் டிப்ளமோ கோர்ஸ் படித்து வருகிறார்.

இந்த நேரத்தில், மேகலாவின் பெற்றோர்கள் வற்புறுத்தலால் கணேசிடம் விவாகரத்து கோரி மேகலா துறையூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.



இருவருக்கும் இடையே நீதி மன்றத்தில் வழக்கு ஒருபுறம் இருந்தாலும் கணேசும், மேகலாவும் இடையிடையே சந்தித்து வந்துள்ளனர். குழந்தையின் படிப்பு செலவுக்கும், மேகலாவின் செலவுக்கும் கணேஷ் அவ்வபோது பணமும் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மேகலாவுக்கு போன் செய்த கணேஷ் நாளை தான் தம்மம்பட்டிக்கு வருவதாகவும், உன்னையும், குழந்தையும் பார்க்கவேண்டும். இருவரும் காலை பத்து மணிக்கு தம்மம்பட்டி பேருந்து நிலையத்துக்கு வருமாறு கணேஷ் சொல்லியுள்ளார்.

அதன்படி, மேகலா தன்னுடைய குழந்தை பிரியதர்சினியை அழைத்துகொண்டு நேற்று காலை தம்மம்பட்டி பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து கணேஷ் தனது மோட்டார் சைக்கிளில், இருவரையும் அழைத்துக்கொண்டு ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள மகளீர் மேல்நிலைப்பள்ளிக்கு பின்பக்கம் உள்ள மண்கரடு என்ற சிறிய மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு பாலத்தின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, மேகலாவின் முகநூல் பக்கத்தில் தேவையில்லாத பல ஆட்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி அதை கண்டித்த கணேஷ், இனிமேல் அவர்களுடனான தொடர்புகளை விட்டுவிடவேண்டும் என்று சொல்லியுள்ளார்.

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், “உனக்கும் எனக்கும் திருமண உறவே வேண்டாம் என்று வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நான் யார் யாரோடு பழகவேண்டும் என்று நீ எனக்கு சொல்லவேண்டிய உரிமை இல்லை...” என்று மேகலா கூறியுள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், உணர்ச்சி வசப்பட்ட கணேஷ் தனது வண்டியில் வைத்திருந்த பேக்கரியில் பன் அறுக்க பயன்படும் சிறிய கத்தியை எடுத்து மேகலாவின் கை, வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் குத்தி அவரை கீழே தள்ளியவர், கீழே விழுந்த மேகலாவின் முகத்தை தரையை பார்த்தபடி குப்புற திருப்பி போட்டு அவருடைய கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். இதில் கழுத்து அறுபட்ட மேகலா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அப்போது, “அம்மா... அம்மா...” என்று குழந்தை பிரியதர்ஷினி போட்ட சத்தத்தை கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டு பெண்கள் சிலர், அங்கிருந்த குழந்தையை மட்டும் தங்கள் வீட்டுக்கு தூக்கிகொண்டு போய்விட்டனர். சத்தம் கேட்டு வந்த ஆண்கள் சிலர் தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 
பின்னர் மேகலாவின் பிணத்துக்கு அருகிலேயே உட்கார்ந்து அமர்ந்து கணேஷ் அழுது கொண்டிருந்தார். இதன் பின்னர் மதியம் ஒரு மணிக்கு அங்கு சென்ற தம்மம்பட்டி போலீசார் கணேசை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

அதற்கு முன்பாக அங்கே சென்ற உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய கணேஷ், “கடந்த நான்கு ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக நானும், மேகலாவும் பிரிந்து வாழ்ந்தாலும், நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். மேகலாவின் குடும்ப செலவுக்கு அவ்வப்போது நான்தான் பணம் கொடுப்பேன். மேலும், மேகலா நர்சிங் கோர்ஸ் படிக்கவேண்டும் என்று சொன்னதால் அவளது படிப்புக்கு தேவையான பணத்தை கடந்த இரண்டு வருடமாக கொடுத்து வருகிறேன். இன்று நான் தான் அவளையும், குழந்தையயும் சந்திக்க வருமாறு கூறினேன். அதையொட்டி இருவரும் வந்தனர். 

நாங்கள் மண்கரடு மலை அடிவாரத்தில் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவளது செல்போனை வாங்கிப் பார்த்ததில் அவளுடைய வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் வேறு வாலிபர் ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது.

அவன் மோசமானவன் என்பது எனக்கு தெரியும், இதனால், அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இவன் நல்லவன் இல்லை இவனுடன் பழகவேண்டாம். நீ இப்படிப்பட்ட ஆட்களுடன் எல்லாம் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று அவளுக்கு அறிவுரை கூறினேன்.

அப்போது அவள் அதற்கு மறுப்பு தெரிவித்து, நான் அப்படித்தான் இருப்பேன் என்றும், என் இஷ்டப்படி தான் வாழ்வேன் என்றும் எதிர்த்து பேசினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே கத்தியால் குத்திக் கீழே தள்ளி மேகலாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். கழுத்தை அறுக்கும் போது அவளுடைய முகத்தை பார்க்க முடியவில்லை. அதனால், அவளை குப்புற திருப்பி போட்டு கழுத்தை அறுத்து கொலை செய்தேன். எல்லாம் முடிந்த பின்னர் தான் மேகலாவும், குழந்தையும் நன்றாக இருக்கவேண்டும் என்று பாடுபட்ட என் வாழ்க்கையும், அவள் வாழ்க்கையும் இந்த செல்போனாலும், பேஸ்புக்காளும்  இப்படி நாசமாகி விட்டதே என்பதை நினைத்து அழுது கொண்டு இருகிறேன்”என்று கணேஷ் வேதனைப்பட்டுள்ளார்.

பெ.சிவசுப்ரமணியம்

சார்ந்த செய்திகள்