Advertisment

“மாநில உரிமைகளை பறிக்கும் சர்வாதிகாரிக்கு சாட்டையடி” - வேல்முருகன் 

Whip the dictator who takes away state rights says Velmurugan

தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதை முன்னிறுத்தி, அதற்கான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டிற்கு ஆளுநராக பொறுப்பேற்றது முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ்சின் அடியாளாகவும், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் ஆர்.என்.ரவி. குறிப்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வந்துள்ளார். ஒரு சில மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து, காலம் கடத்தியும் வந்திருக்கிறார்.

Advertisment

இதனால், மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் (08.04.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்; அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் செல்லாது; சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான ஆளுநரின் செயல்பாடு ஏற்புடையதல்ல; ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பிரிவுகளை முக்கியமாக ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிரானதாக உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசமைப்புச் சட்ட உறுப்பு 200க்கு சிறப்பான விளக்கத்தை தந்திருப்பதும் சனநாயகத்தின் இன்றைய தேவை. அதாவது, அரசியலமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு படியே ஆளுநர் செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சார்போடு செயல்படக்கூடாது. சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வரைவில் ஆளுநர் குறை கண்டால், அவற்றைச் சுட்டிக்காட்டி, அத்திருத்தங்களைச் செய்து, திரும்ப அனுப்புமாறு தான் ஆளுநர் கோர வேண்டும். ஒப்புதலும் தராமல், எந்தக் கருத்தும் கூறாமல், தன்னிடம் வந்த சட்ட முன்வரைவைக் காலவரம்பின்றி ஆளுநர் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

திருத்தங்களைச் சுட்டிக்காட்டி மாநில அரசுக்கு திருப்பி அனுப்பும் சட்ட முன்வரைவுகளை, சட்டப்பேரவை சரி செய்தோ அல்லது பழைய நிலையிலோ இரண்டாவது தடவை நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். முதல் தடவை அனுப்பப்பட்ட சட்ட முன்வரைவை, மூன்று மாதங்களுக்குள் ஆய்வு செய்து ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உறுப்பு 200க்கு மிகச் சரியான விளக்கம் அளித்துள்ளனர். உறுப்பு 200-இல், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன்வரைவுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஒப்புதலோ அல்லது திருத்தங்களோ தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முதல் கட்டத்தில் மூன்று மாதமும், இரண்டாம் கட்டத்தில் ஒரு மாதமும் என்று நீதிபதிகள் துல்லியமான காலவரையறை செய்திருப்பது முக்கியமான ஒன்று.

அதோடு, தமிழ்நாடு அரசு அனுப்பிய அந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கும், ஆளுநர் ஒப்புதல் தந்ததாகக் கருதி, அவை இன்றிலிருந்து சட்டமாக்கப்படுகின்றன என்று உச்ச நீதிமன்றம் உடனடியாக அறிவித்திருப்பது வரவேற்க கூடியது. உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142இன் படி, இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கின்றனர். பாஜக, ஆர்.எஸ்.எஸ்–சின் அடியாளாகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்தும், மாநில உரிமைகளை அவமதித்தும், சர்வாதிகாரி போன்று செயல்பட்டு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உச்சநீதிமன்றம் சாட்டையடி கொடுத்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எனவே, ஆர்.என்.ரவியை ஆளுநர் பதவியிலிருந்து இந்தியக் குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இவை தவிர, தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதை முன்னிறுத்தி, அதற்கான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

RN RAVI Tamilnadu governor velmurugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe