In which temples are the idols enchanted? - Order to the Treasury to file a report

தமிழகத்தில் எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன என்பதைக் கண்டறியவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய,இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வரலாறு, சிலைகளின் தொன்மை, அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் பல கோவில்களில் இந்தப் பதிவேடுகள் காணாமல் போனதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோவில் சொத்துகள் குறித்த விவரங்களை அறநிலையத் துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Advertisment

இதில் பல கோவில்களின் சொத்துக்கள், சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளதாகக் கூறி, சொத்து ஆவணங்கள், சிலைகள் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி., தொல்லியல்துறை அடங்கிய கூட்டு புலன் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி,வெங்கட்ராமன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ‘கடத்தப்படும் சிலைகள் வெளிநாடுகளில் உள்ளன. இது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் உடந்தையுடன் சிலைகள் குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன’ என மனுதாரர் கூறினார்.

இதையடுத்து, எந்தெந்த கோவில்களில் உள்ள சிலைகள் மாயமாகியுள்ளன என்பதைக் கண்டறிந்து அறிக்கை அளிக்க,இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்துஅறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள், நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.