Where is Tamil Nadu going? - PMK Anbumani Kattam

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் தனியார் பள்ளியில் பள்ளி மாணவனுக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

அண்மையாகவே நெல்லை மாவட்டத்தில் சாதிய ரீதியிலான பழிக்குப் பழி தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தனியார் பள்ளியில் கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அருகிலே இருக்கக்கூடிய ரோஸ் மெரி எனும் பிரபல தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வகுப்பு நேரத்திலேயே பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சக மாணவனை மாணவர் ஒருவர் வெட்டியுள்ளார். உடனடியாக இதனைக் கண்ட ஆசிரியர் மாணவனை தடுக்க முயன்ற பொழுது ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

காயமடைந்த மாணவர், ஆசிரியர் என இருவரும் அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டிய மாணவன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடனடியாக சென்ற காவல்துறை துணை ஆணையர் மற்றும் காவல்துறையினர் பள்ளி வளாகத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பாளையங்கோட்டை பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

Where is Tamil Nadu going? - PMK Anbumani Kattam

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள் நடப்பது நல்லதல்ல.

இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் தான் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இது மறந்து, கடந்து போக வேண்டிய மோதல் தான். ஆனால், அதற்கான அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை வெட்டும் அளவுக்கு ஒரு மாணவரின் மனநிலை வெறுப்படைந்திருக்கிறது என்றால், அது மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்திலும் அதிகரித்து வரும் சீரழிவையே காட்டுகிறது. இந்தப் போக்கு சரி செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் சக மாணவர்களால் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நாங்குநேரியில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை வீடு புகுந்து வெட்டப்பட்டது, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் பேருந்தை மறித்து அதில் பயணம் செய்த மாணவர் வெட்டப்பட்டது என வன்முறை நிகழ்வுகள் தொடர்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை பார்க்கும் போது தமிழகம் எங்கே செல்கிறது? என்ற கவலை தான் ஏற்படுகிறது.

மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுவது தான் பள்ளிகள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகும். இதை மனதில் கொண்டு பள்ளிகளில் நீதிபோதனை பாடவேளைகளை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்; விளையாட்டுப் பாடவேளையை அதிகரிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.