Skip to main content

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது? - அண்ணாமலை கேள்வி

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

"Where does the money allocated to pregnant women go?" - Annamalai question

 

“கர்ப்பிணிகளுக்கான நிதியுதவித் திட்டத்தைக் கடந்த 2 ஆண்டுகளாக முடக்கி இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி, நம் சகோதரிகளுக்குச் சென்று கிடைக்கவில்லை என்றால், இந்த நிதி எங்கே செல்கிறது” எனத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி திட்டம் தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்ப்பிணிகள் நலனுக்காக, மத்திய அரசின்  ‘மாத்ரு வந்தனா’ திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 1987-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்துடன் இணைந்து, கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக ரூ.14 ஆயிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவியில் 60 சதவீதம் மத்திய அரசு நிதியாகும்.

 

கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ. 257 கோடி நிதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகப் பல்வேறு காரணங்கள் கூறி, கர்ப்பிணிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது. தி.மு.க. அரசின் இந்த மெத்தனப் போக்கைத் தமிழக பா.ஜ.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

கர்ப்பிணிகளுக்கான நிதியுதவித் திட்டத்தையும், கடந்த 2 ஆண்டுகளாக முடக்கி இருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி, நம் சகோதரிகளுக்குச் சென்று கிடைக்கவில்லை என்றால், இந்த நிதி எங்கே செல்கிறது? கர்ப்பிணிகளை அலைக்கழிக்கும் மெத்தனப் போக்கை தி.மு.க. அரசு விட்டு விட்டு, உடனடியாக அவர்களுக்கான நல நிதியை வழங்க வேண்டும் என்றும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விளையாடக் கூடாது என்றும் தமிழக பா.ஜ.க. சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்