Skip to main content

தமிழகத்தில் திரையிட்டு விடலாம் என்ற எண்ணம் எங்கிருந்து வந்தது?-சீமான் கண்டனம்!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020
 Where did the idea for Muralitharan's biopic to be screened in Tamil Nadu come from? -Seeman Condemnation

 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான செய்தியை அறிந்தேன். தம்பிக்கு நாம் சொல்லத் தேவை எதுவுமிருக்காது; அவரே புரிந்துகொண்டு அப்படத்திலிருந்து விலகுவார் என அமைதி காத்தேன். ஆனால், தற்போது அப்படத்தின் அடுத்த கட்டப்பணிகள் தொடங்கியிருப்பதால் தம்பிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன்.

 

 Where did the idea for Muralitharan's biopic to be screened in Tamil Nadu come from? -Seeman Condemnation


முத்தையா முரளிதரனை வெறுமனே ஒரு விளையாட்டு வீரர் எனச் சுருக்கி மதிப்பிட முடியாது. தனது உலகளாவியப் புகழ் வெளிச்சத்தைக் கொண்டு சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையையும், இன ஒதுக்கல் கொள்கைகளையும் நியாயப்படுத்திப் பேச, தமிழர் எனும் இன அடையாளத்தைப் பயன்படுத்தும் சிங்களப் பேரினவாதத்தின் கைக்கூலியே முரளிதரன். 2 இலட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு ஈழ நிலம் முற்றாய் பிணக்காடாய் மாறி, இரத்தச் சகதியிலே எமது உறவுகளின் உடல்களும், எங்கும் தமிழர்களின் மரண ஓலங்களும் கேட்ட நொடிப்பொழுதில் எவ்விதத் தயக்கமோ, குற்றவுணர்வோ இன்றி, ‘இனமழிப்பு செய்யப்பட்ட அந்நாளை எனது வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளாகக் கருதுகிறேன்’ என அறிவித்தவர் முத்தையா முரளிதரன். மகிந்தா ராஜபக்சே நல்லாட்சி தருவதாகக் கூறிய முரளிதரன், அவரை கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலாவோடு ஒப்பிட்டவர். 

அங்கு நடந்தத் தேர்தல்களின் போது தீவிர தமிழர் எதிர்ப்பு மனநிலை கொண்ட சிங்கள இனவாதிகளுக்கு ஆதரவாகவும், காணாமல் போன தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டி தமிழ்த் தாய்மார்கள் நடத்திய போராட்டத்தை துச்சமென நினைத்து அதனைக் கொச்சைப்படுத்தியும் பேசியது துரோகத்தின் உச்சம். மாத்தையா, கருணா வரிசையில் பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்திட்ட முத்தையா முரளிதரனை பன்னாட்டுச்சமூகத்திற்கு தமிழினப்படுகொலை நிகழவில்லை எனக் கூற வைக்கவே சிங்களப்பேரினவாத அரசும், அதன் ஆட்சியாளர்களும் அவரை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள். அத்தகைய நிலைப்பாடு கொண்ட சிங்களக் கைக்கூலி முரளிதரன் வாழ்க்கையைத் திரைமொழியில் காட்சிப்படுத்துவது ஈழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானதாகத்தான் அமையும்.

30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழ நிலத்தில் நடைபெற்ற வீரம்செறிந்த விடுதலைப்போராட்டம் பயங்கரவாதம் எனப் பழிசுமத்தப்பட்டு, முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டப் பின்னர், அந்நிலத்தில் இறக்கப்பட்ட புலிக்கொடியை தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான தமிழகத்தில் ஏற்றி நிறுவியிருக்கிறோம். இந்நிலையில், சிங்களக்கொடி பொறித்த இலங்கையின் சீருடையோடு தம்பி விஜய் சேதுபதி திரையில் தோன்றி, அதனை தமிழக வீதிகளில் திரைப்படங்களின் வழியே கொண்டுபோய் சேர்க்க நினைப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது. இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முரளிதரன் உட்பட எவரும் தமிழகத்தில் விளையாடுவதற்கு முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தடைவிதித்ததை தம்பி விஜய் சேதுபதி அறியாததா? அதுவெல்லாம் தெரிந்திருந்தும் முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் நடிக்க முனைவதை எப்படி நம்மால் ஏற்க முடியும்? திரையரங்குகளில் வெளியிடாது இணையம் வாயிலாகத் திரைப்படத்தை வெளியிடலாம் என தம்பி விஜய் சேதுபதி நினைத்து செயல்படத் தொடங்கினால் அது வருங்காலங்களில் அவரது மற்றப்படங்கள் வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.விஜய் சேதுபதி உலக  அரசியலும், நாட்டின் சூழலும் தெரியாதவரல்ல.

அவர் ஆளும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகக் கருத்து வெளியிட்ட நேரத்திலெல்லாம் அவருக்கு ஆதரவாகவே நாம் நின்றிருக்கிறோம். இது வெறும் படமல்ல என்பதை உணர்ந்து, இதிலிருக்கும் அரசியலின் ஆபத்தைத் தெரிந்தே இப்படம் வெளியாவதற்கு முன்பே எதிர்க்கிறோம். அதனை விஜய் சேதுபதி உணர்ந்துகொள்ள படத்திலிருந்து விலகுவதற்கான காலநேரத்தை அவருக்கு அளித்தோம். ஆனால், அதனையெல்லாம் துளியும் பொருட்படுத்தாது படத்தை உருவாக்கம் செய்ய முனைந்திடுவது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், அது உலகமெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளை உரசிப் பார்ப்பதாகவே இருக்கிறது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலையையும், முத்தையா முரளிதரன் அதனை நியாயப்படுத்திப் பேசுவதையும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இது அறியாமையால் நிகழ்ந்தவையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழர்களின் உணர்வுகளுக்கு அணுவளவும் மதிப்பளிக்காது அப்படத்தில் நடித்திட முனைப்புகாட்டுவது விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கைக்கு நல்லதல்ல. ராஜபக்சேவின் மகன் இப்படத்தைக் கொண்டாடும்போதே அடுத்த நொடியே அப்படத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். அதற்குப் பிறகும், எந்த நம்பிக்கையில் படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீட்டைச் செய்தீர்கள்?

இனத்துரோகி முரளிதரன் வாழ்க்கைப்படத்தை தமிழகத்திலேயே திரையிட்டு விடலாம் எனும் அளவுக்கு எண்ணம் எங்கிருந்து வந்தது? முரளிதரன் எனும் சிங்களக் கைக்கூலியைக் கொண்டாடினால் தமிழர்களின் மனங்களிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டாமா? முரளிதரனின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தி கொழும்பு வீதிகளில் வேண்டுமானால் திரையிடலாம். தமிழகத்தின் வீதிகளில் ஒருநாளும் அது நடக்கப்போவதில்லை. ஆகவே, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக இப்படத்திலிருந்து முற்றிலுமாக விலகும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தம்பி விஜய் சேதுபதிக்கு அன்போடு அறிவுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாதக வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 naam Tamil party candidate who came to file nomination in a different way

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  இதற்காக மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி இன்று வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பலரும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழ் நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியோடு முடிவுற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய மகேஷ் ஆனந்த் இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 ad

முன்னதாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மக்கான், கிரீன் சர்க்கிள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க புலி வேஷமிட்டு நடனமாடியபடியும், அய்யன் திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், மருது சகோதரர்கள், ராஜராஜ சோழன் போன்று வேடமிட்டு பேரணியாக வந்தனர்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.