ADVERTISEMENT

இந்தியாவைப் புரிந்து கொள்ள  நினைக்கும் போதெல்லாம் தமிழகத்தைப் பார்க்கிறேன்'  -நெல்லையில் ராகுல் காந்தி பேச்சு

04:35 PM Apr 12, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இதனையொட்டி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக இன்று (12.04.2024) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வந்துள்ளார். சிறப்பு விமானத்தின் மூலம் மதுரை வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கோவை செல்ல இருக்கிறார்.

ADVERTISEMENT

நெல்லை வந்துள்ள ராகுல் காந்தியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் இந்தியா கூட்டணி சார்பில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 நாடாளுமன்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடலை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். தமிழகத்தையும், தமிழக மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்தை விரும்புவதால் தான் எனது யாத்திரையை நான் குமரியில் இருந்து தொடங்கினேன். தமிழக கலாச்சாரம், பண்பாடு என்னை கவர்ந்துள்ளது. என் மீது தமிழக மக்கள் அன்பை பொழிந்துள்ளனர். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கலைஞர் ஆகியோர் தமிழ்நாட்டின் ஆளுமைகள். ஒருபுறம் பெரியார் உள்ளிட்டோர் போதித்த சமூக நீதி மறுபுறம் மோடியின் வெறுப்புணர்வு. இரண்டு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் மோதல் இந்தத் தேர்தல். நம்மைப் பொறுத்தவரை இந்தியாவின் எல்லா கலாச்சாரமும் பண்பாடும் மிகப் புனிதமானது என்று கருதுகிறோம். ஆனால் அவர்களோ ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள். இதனுடைய முடிவு என்னவென்றால் இந்த நாட்டில் இருக்கின்ற இளைஞர்களில் 83% பேர் வேலையில்லாமல் திண்டாட்டத்தை சந்தித்துள்ளார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு தொடரும். வேலையில்லாத டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் நிறைவேற்றப்படும். வந்த உடனே காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையர்களை பிரதமர் தான் தேர்வு செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு, மீனவர்கள், விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. ஆனால் நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70% மக்களின் பணத்தை வைத்துள்ளனர். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். அனைத்து துறைமுகங்கள், மின்சார தயாரிப்பு நிறுவனங்களை அதானியிடம் ஒப்படைக்கிறார் மோடி. நாட்டின் அனைத்து அமைப்புகள், முகமைகள் ஆர்எஸ்எஸ் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. நாட்டின் அரசியல் சாசனத்தையே மாற்றுவேன் என்கிறது பாஜக'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT