
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்த சசிகலா இன்று (27.01.2021) விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது சிறை தண்டனை முடிந்ததற்கான ஆவணங்களைப் போலீசார் சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
சசிகலா சிகிச்சை பெறும் விக்டோரியா மருத்துவமனையில் டி.டி.வி.தினகரன், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா, செந்தூர் பாண்டியன் ஆகியோர் உள்ளனர். விடுதலையாகும் சசிகலாவைக் காண வெளியே அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர். விடுதலை செய்யப்பட்டாலும் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருப்பதால் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் சசிகலா சென்னை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் சசிகலாவுக்கு இன்றும் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், “ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதைப் பார்க்கும்பொழுது சசிகலாவின் விடுதலையைக் கொண்டாடுவது போல்தான் தோன்றுகிறது. மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று சசிகலாவை அழைத்துச் செல்வோம். அதிமுகவை மீட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியைக் கொடுக்க முயற்சி நடக்கிறது,” என்றார்.
அப்பொழுது, அதிமுக - அமமுக இணையுமா என்ற கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.