கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்குபரவிய கரோனா, 30 ஆயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நோய் பரவலைத்தடுப்பதற்காக ஒவ்வொரு நாடும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்குஒர்க் பர்மிட் விசா வாங்கிக்கொண்டு வந்தவர்கள், படிக்க வந்தவர்கள், சுற்றுலா விசாவில் வந்தவர்கள், அதேபோல வெளிநாடு சென்றஇந்திர்கள்அனைவரும் அந்தந்த நாடுகளிலேயே சிக்கிக்கொண்டு உள்ளனர்.
இந்தியாவில் மட்டும் வெளிநாட்டு குடிமகன்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். தமிழகத்தில் குறிப்பாக திருவண்ணாமலையில் 100க்கும் அதிகமானவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஜெர்மனியைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் சுற்றுலா விசாவில் வந்து இங்கே தங்கியிருந்தனர். அவர்கள் நாங்கள் சொந்த நாட்டுக்கு செல்ல எங்கள் நாட்டு தூதரகத்திடம் கேட்டுள்ளோம். அவர்கள் சென்னை வந்துவிடுங்கள் எனச்சொல்லியுள்ளார்கள். எங்களை சென்னைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என சில ஆவணங்களை காட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்களிடம் கேட்டனர். அவரும், அரசிடம் ஆலோசித்துவிட்டு பின்னர் பாதுகாப்பாக அனுப்பிவைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 13 பேர் சுற்றுலா விசாவில் வந்து திருவண்ணாமலையில் தங்கியிருந்தனர். அவர்கள் கரோனா வைரஸ் பரவல் பயத்தால் தங்களது சொந்த நாட்டுக்கு செல்வதாக மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பத்தைபரிசீலனை செய்து, அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நல்லஉடல்நிலையுடன்இருப்பதை உறுதி செய்துகொண்டு அவர்களை தனி வேன் மூலமாக காவல்துறை வாகன பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலமாக சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க பிரான்ஸ் தூதரகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலையிலேயே தங்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்த உறவுகள் மற்றும் நண்பர்களிடம் விடை பெறும்போது கண்ணீர் விட்டு கட்டிப்பிடித்து அழுதனர். அதிலும் ஜான்சி என்கிற பிரான்ஸ் நாட்டு பெண், தனது காதலர் தன்னை விட்டு தாயகம் திரும்புவதை நினைத்து கட்டிப்பிடித்து அழுதார். நாம் அடுத்து எப்போது சந்திப்போம் என தெரியவில்லை. நீ பாதுகாப்பாக இங்கேயே இரு என ஜான்சியின் காதலர் ஜான்சியிடம் கட்டிப்பிடித்தபடி சொன்னார். இப்படி 3 ஜோடிகள் தங்களது பிரிவை நினைத்து கலங்கினர். இது அங்கிருந்த காவலர்களையே கலங்க வைத்தது.