'When will freedom come?' The stir caused by the poster

Advertisment

இன்று நாட்டின் சுதந்திரதின நாளில் புதுக்கோட்டை நகரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள 'எப்போது கிடைக்கும் சுதந்திரம்?' என்ற போஸ்டர் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் நியாஸ் கூறும் போது, ''இன்று நாடே சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் நீட் எங்கள் குழந்தைகளின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிறது. இனிமேலும் எங்கள் உயிர்களை இழக்க முடியாது. நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் மருத்துவ கனவு உயிரிழப்பை மட்டுமே தருகிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு 2017 ல் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 3 ஆண்டுகள் வரை ஒரு அரசுப் பள்ளி மாணவர் கூட மருத்துவக் கல்லூரி போனதில்லை. 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு 4 ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு போகிறார்கள். ஆனால் 2017 முதல் 2023 வரை பல மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் எனநீட் மரணங்கள் இதுவரை நிகழ்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் மீண்டும் ஒரு தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஒன்றிய அரசும் ஒன்றிய அரசுக்கு கைக்கூலியான தமிழக கவர்னரும் ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் உயிர்பலிகளை யார் ஏற்பது? ஏதோ தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை சில கூட்டம் கட்டமைக்கிறது. இவர்களின் பிதாமகரான பிரதமர் மோடியே குஜராத் முதல்வராக இருந்த போது நீட் தேர்வை எதிர்த்தவர் தான். முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும், பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் அவருக்கு ஒன்றும் புதிதல்ல. ஆதார் அட்டை, ஜிஎஸ்டி, நீட் இது மூன்றுமே குஜராத் முதல்வராக மோடி எதிர்த்தது தான்.

Advertisment

உயிரிழப்பு இல்லாமல் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் தமிழ்நாட்டில் நீட் என்ற ஒரு தடுப்பை வைத்து மாணவ மாணவிகளை ஒன்றிய அரசு பரலோகம் அனுப்பி வருகிறார்கள். தற்கொலைகள் தவறு, ஆயிரம் இருந்தாலும் அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது போன்ற தர்க்கங்களுக்கு நடுவே மருத்துவக் கனவுக்காக உயிரையே மாய்த்துக்கொண்ட இந்தப் பிஞ்சு முகங்களை நாம் நினைவில் நிறுத்த வேண்டியது அவசியமாகிறது. நீட்டும் ஒரு நவீனத் தீண்டாமையாகும்.அதனால் தான் நாட்டு நலன் கருதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுக்கோட்டை கிளை இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளது'' என்றார்.