Skip to main content

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

“When is kilambakkam Bus Station opening?” Explanation by Minister Shekharbabu

 

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதற்கும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் சென்னை மாநகரம் கடும் வாகன நெரிசலில் சிக்கத் தவிக்கும். கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்லவே சில மணி நேரங்கள் ஆகிவிடும்.

 

இதனைத் தவிர்க்க சுமார் 393 கோடி செலவில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் தென்தமிழகத்துக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்தே புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் துறை கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள அமைச்சர் சேகர்பாபு இன்று கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். 

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “88 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து இருக்கிற இந்தப் பேருந்து நிலையத்தில் மாநகரத்தின் பேருந்துகள், வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் எனச் சொல்லப்படும் தனியார் பேருந்துகள் என ஏறத்தாழ 285 பேருந்துகள் இயக்கப்படுவது பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தி விரைந்து முடிப்பதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

 

பொங்கலுக்கு முன்பே திறப்பதற்கு முயன்று பார்க்கலாம். குறிப்பிட்ட தேதியை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது. துறைச் செயலாளரும் மாவட்ட அமைச்சரும் பல்வேறு புதிய பணிகளை இந்தப் பேருந்து நிலையத்தில் துவக்க வலியுறுத்தியுள்ளார்கள். அவைகளையும் இணைத்து மேற்கொள்ள இருப்பதால் எவ்வளவு விரைவாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரமுடியுமோ அத்தனை விரைவாக கொண்டு வர முயற்சி செய்கிறோம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Omni Bus Owners Case Dismissed in Supreme Court

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர்.  இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும்” என விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான மனு கடந்த 9 ஆம் தேதி (09-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், ‘போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது’ என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து கோயம்பேட்டில் இருந்து கடந்த 10 ஆம் தேதி (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Omni Bus Owners Case Dismissed in Supreme Court

அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த உத்தரவில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாகக் குறிப்பிட வேண்டும். ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிகோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில்   மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம்” எனத் தெரிவித்து வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர்த்து வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.