Skip to main content

சேலத்திற்குள் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவலா? - வாட்ஸ்ஆப் வீடியோவால் பரபரப்பு!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

whatsapp viral video police explain in salem district

 

சேலத்திற்குள், பெண் குழந்தைகளைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 400 பேர் ஊடுருவி இருப்பதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

 

வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த இரு நாள்களாக ஒரு காணொலி பதிவு வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த காணொலியில் பேசும் ஒருவர்,

 

''சேலத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 400 பேர் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள், பெண் குழந்தைகளை திட்டமிட்டு கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள். இதில் ஒருவன் நேற்று பிடிபட்டுள்ளான். பொதுமக்கள் அவனை தாக்கினர். அப்போது அந்த நபர், என்னைப் பிடித்து விடலாம். இன்னும் 399 பேர் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினான். எனவே, உங்கள் குழந்தைகளை மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

காணொலி பதிவில், மர்ம நபர் ஒருவரை பொதுமக்கள் சேர்ந்து தாக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காணொலியைப் பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து நாம் சேலம் மாநகர காவல்துறை தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டோம்.

 

''சமூக ஊடகங்களில் உலாவரும் இந்த காணொலி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பொய்யான பதிவு. சேலத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த மர்ம நபர்கள் யாரும் ஊடுருவவில்லை. அமைதியை சீர்குலைக்கும் வகையில் சிலர் இப்படியான வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

 

காணொலியில் இடம்பெற்ற சம்பவம், மது போதையில் ஒருவரிடம் இருந்து குழந்தையை மீட்கும்போது எடுக்கப்பட்ட காட்சியாகும். அதைப் பெண் குழந்தையைக் கடத்தியதாக திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். ஆதாரமற்ற தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். மேலும், இதுபோன்ற தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்