Advertisment

அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அனைத்து உழவர் சங்கத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

next

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க சென்னையில் தியாகராய நகரில் ஸ்ரீமஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள்& முன்னோடிகள் பங்கேற்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

Advertisment

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவுடன் உழவர் அமைப்புகளின் சார்பில் ஏப்ரல் 11-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம்.

Advertisment

காவிரி பாசன மாநிலங்களுக்கிடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்காக காவிரி நடுவர் மன்றம் கடந்த 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதன்படி மார்ச் 29-ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான நேர்மையான முயற்சிகளை மத்திய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே மேலாண்மை வாரியம் அமைக்கப்போவதில்லை என தனது மனநிலையை மத்திய அரசு வெளிப்படுத்தி விட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமைக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி சென்னைக்கு வந்து அறிவித்ததும், சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தாம் பங்கேற்ற எந்த நிகழ்ச்சியிலும் ஒரு வார்த்தைக்கூட பேச மறுத்ததும் இதன் வெளிப்பாடுகளே.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக உச்சநீதிமன்றம் அமைக்க ஆணையிட்ட ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதில் மத்திய அரசுக்கு தொடக்கத்தில் எந்தவிதமான ஐயமும் இல்லை. ஒரு கட்டத்தில் ‘‘காவிரி ஸ்கீம் என்பதும், காவிரி மேலாண்மை வாரியம் என்பதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்று தான். இதுகுறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை’’ என்று நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் உறுதியளித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு நடுவர் மன்றம் எந்த சிரமமும் வைக்கவில்லை. பஞ்சாப்& ஹரியானா மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பக்ரா & பியாஸ் மேலாண்மை வாரியத்தின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை நடுவர் மன்றம் அதன் தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளது. வாரியத்தில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்கள் விவரத்தையும் நடுவர் மன்றம் வரையறுத்துள்ளது. அதனடிப்படையில் அரசாணை தயாரித்து வெளியிட வேண்டியது மட்டுமே மத்திய அரசின் பணியாகும். ஆனால், கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்திற்கு மத்திய அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது. கடந்த காலங்களில் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகங்கள் மட்டுமே பரிசாகக் கிடைத்து வந்துள்ளன. ஆனால், இப்போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டிருப்பது துரோகங்களின் சிகரம் ஆகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசின் துரோகத்தை விட மாநில அரசின் துரோகம் பெரியது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்ய தயாராகி வருவதாகவும், தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்; மத்திய அரசுக்கு கடுமையான அரசியல் அழுத்தம் கொடுத்து உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த 10.03.2018 அன்று ஈரோட்டில் நடந்த அனைத்து உழவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, அதற்காகப் போராடிய உழவர்கள் மீது கடுமையாக அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக விவசாயிகளுக்கு போட்டிப் போட்டுக்கொண்டு துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இக்கூட்டம் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களின் பாசன, குடிநீர் ஆதாரமாக காவிரி தான் திகழ்கிறது. இந்த மாவட்டங்களிலும் சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய 7 மாநகராட்சிகளிலும் வாழும் 5 கோடி தமிழக மக்கள் குடிநீருக்காக காவிரி நீரையே நம்பியுள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காவிரி விவகாரத்தில் இழைக்கப்படும் துரோகங்களை சகித்துக் கொண்டு, உரிமைகளை இழந்து உணர்வற்றவர்களாக இருக்க முடியாது என்று இக்கூட்டம் கருதுகிறது. எனவே, காவிரி விவகாரத்தில் இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும், இருக்கும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் போராடுவதற்காக அனைத்து உழவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பை உருவாக்கவும், அதன் ஒருங்கிணைப்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை நியமிக்கவும் இந்தக் கூட்டம் ஒருமனதாக முடிவெடுக்கிறது.

காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அதிகாரங்களையும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் வரும் 11.04.2018 புதன்கிழமை மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது. மாநில உரிமைக்காக நடத்தப்படும் எந்த ஒரு போராட்டமும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், வணிகர்கள், மீனவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டால் தான் வெற்றி பெறும் என்று கூட்டமைப்பு கருதுகிறது. அதனால், இப்போராட்டத்திற்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.

காவிரி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழகத்திலுள்ள அனைத்து உழவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் ஆற்று நீர் உரிமைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் தமிழகத்தின் மிகப்பெரிய வாழ்வாதாரப் போராட்டம் ஆகும். இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை; நாம் அனைவரும் தமிழர்கள்; காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் முழு அடைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புக் கோருகிறது.

public meeting Counseling leaders Thalassir Sangam What next
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe