மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலை தென்காசி மாவட்டத்தின் தமிழக எல்லையான புளியரை வழியாகக் கேரளா செல்கிறது. இரண்டு மாநிலத்திலும் வர்த்தகம், பொருட்டும், பயணிகளின் வழித்தடமாகவும் புழங்குவதோடு கேரள மக்களுக்கு வேண்டிய அத்யாவசியத் தேவையான காலனிதொட்டு உணவு உடை என தலை வரை தேவைப்படும் அத்தனை பொருட்களைக் கொண்ட வாகனங்கள், கட்டுமானப் பொருட்கள், காய்கறிகள் ஆலயத்திற்குத் தேவையான அலங்காரப் பொருட்கள் என்று அன்றாடம் ஆயிரத்திற்கும் மேலான இலகு ரக வாகனம், முதல் கனரக வாகனங்கள் மூலமாக புளியரை பார்டர் வழியாகவே கேரள மாநிலம் கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோன்று கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு இந்த வழியாக வந்து செல்கின்றன.

Advertisment

 Whatever the fines ... the power of the officer ... the boring motorists !!

அப்படி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களைச் சோதனையிடுகிற இரு மாநிலங்களின் சுங்கச் சாவடிகள், காவல் செக்போஸ்ட்களும் அமைந்துள்ளபடியால் அவர்களின் சோதனையை முடித்துக் கொண்டு கடப்பதற்குள் இங்கே வாகனங்களின் நெருக்கடி ஏற்பட்டு விடும். ஆனாலும் அவைகள் கால தாமதமின்றி க்ளியரன்ஸ் செய்யப்பட்டு விடும்.

Advertisment

இந்த நிலையில் அண்மையில் பயிற்சி முடித்துவிட்டு புளியரை காவல்நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தவர் ஞானரூபி பிளாஸா என்பவர். என்.எச்.சில் செல்கிற வாகனங்களைச் சோதனையிடுவதற்கு இரண்டு மாநிலங்களின் 8 சோதனைச் சாவடிகளிருந்த போதிலும், பெண் எஸ்.ஐ. ஞானரூபி பிளாஸா அன்றாடம் மாலை 5 மணிக்கெல்லாம் சோதனைச் சாவடிகளுக்குச் சற்று தொலைவில் நின்றவாறு, வாகனச் சோதனையிலீடுபடுகிறாராம். ஏதாவது குறையிருந்தால் ஸ்பாட் ஃபைன் போடுவதோடு, குறையே இல்லாமலிருக்கும் வாகனங்களைக் கூட ரேஸ் ட்ரைவிங் என 400 ரூபாய் அபராதம் தீட்டிவிடுகிறாராம். அந்த வாகன ஓட்டிகள் யதார்த்தத்தைச் சொன்னாலும், அதிகம் பேசுறியா என்ற கெத்தில், வாகனத்தை ஒரம் கட்ட வைத்து விடுவாராம்.

madurai

லோடுவாகனத்தில் முறைப்படி ஒரு லோடுமேனை ஏற்றிச் சென்றாலும் 200 ரூபாய் அபராதம், ஆர்.சி.யி்ல் அப்படி குறிப்பிட்டிருக்கா, சொல்லு என்று கூடுதல் ஃபைன் வேறராம். இதில் கனரக வாகனங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனவாம். வாகன ஓட்டிகளின் வயதையும் பொருட்படுத்தாமல் அவர்களிடம் கண்ணியக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிப்பாராம் இந்த பெண் எஸ்.ஐ. பல நேரங்களில் ஆர்.சி. பெர்மிட்களைச் சோதனையிடும் எஸ்.ஐ. அது போன்ற வாகனங்களை அங்கேயே சோதனையிட்டு அனுப்பாமல், ஊருக்குள்ளிருக்கும் காவல் நிலையத்திற்கு தேவையில்லாமல் கொண்டு வருவதால் அந்தப் பகுதி வழியாக தரிசனம் பொருட்டு புகழ் பெற்ற தட்சிணாமூர்த்தி ஆலயம் செல்லும் பக்தர்கள், அவர்களின் வாகனங்கள் செல்வதற்கு நேரமாவதோடு கடுமையான நெரிசல்கள். தடைகள். இதனால் நேரத்திற்கு செல்ல முடியாத வாகனங்கள், விதி, என்று போட்ட அபராதத்தைக் கட்டி விட்டு வயிற்றெரிச்சலோடு கிளம்புகிறார்களாம். தவிர முறையான அளவு பாரம் ஏற்றி வரும் வைக்கோல் லாரிகளைக் கூட ஓவர் லோடு என்று மணிக்கணக்கில் வெயிட்டிங்கில் வைத்து விடுவராம். இதனால் பல டிரைவர்கள் உணவு கூடக் கிடைக்காமல் தவித்துள்ளனர்.

Advertisment

POLICE

சோதனையிடும் இந்த எஸ்.ஐ. கேரளா பயணிக்கும் மணல், மற்றும் ஜல்லிகற்கள் லாரிகளை மட்டும் கண்டு கொள்வதில்லையாம். காரணம், லோக்கல் புரோக்கர் மூலம் அந்த லாரிகளில் மொய் பணம் வசூலிக்கப்பட்டு அது முறையாக காவல் நிலையம் சென்று விடுவதுதான் எஸ்.ஐ.யின் பாராமுகத்திற்குக் காரணமாம். வரை முறையின்றி, ஒரு டார்கெட்டை வைத்து அன்றாடம் சோதனை என்ற வகையில் வாட்டியெடுப்பது கண்டு டூவீலர் முதல் கனரக வாகன ஒட்டிகள் வரை மனம் பொறுமுகிறார்கள். பெண் எஸ்.ஐ.யின் இந்த அதிகார அலம்பல் புளியரை நகரிலும் பிரச்சினையை ஏற்படுத்த விவகாரத்தை உற்றுக்கவனிக்கும் புளியரையின் சர்வ கட்சிகள் ஒன்றிணைந்து எஸ்.ஐ.க் கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிற முடிவிலுமிருக்கிறார்களாம்.

நாம் இது குறித்து தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுகுணசிங்கின் கவனத்திற்குக் கொண்டு சென்றதில் அனைத்தையும் கேட்டவர், விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.

சோதனை தேவைதான். ஆனால் அவைகள் சட்ட நெறி முறைகளுக்குட்பட்டதாக இருக்கவேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.