Skip to main content

'காமராஜருடன் ஸ்டாலினை ஒப்பிடுவது என்ன தவறு?'- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 'What is wrong with comparing Stalin with Kamaraj?'- E.V.K.S. Elangovan interview


'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் டெபாசிட் இழப்பார்கள்' என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''சென்னையில் கடந்த 11-ந்  தேதி காமராஜர் இல்லத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லோரும் காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என்றும், நடைபயணம் செல்ல வேண்டும், அதிக அளவில் பூத் கமிட்டி அமைக்கப்பட்ட வேண்டும், இளைஞர்களை அதிக அளவில் காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் பேசினார்கள். காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது கூடுதலாக இரண்டு வாரத்தை பேசினார். அதைப் பற்றிய விவாதம், பிரச்சனை முடிந்து விட்டது. அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று சொல்லும் போது அவர் சொன்னதை ஏற்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டாம் என முன்னாள் எம்.பி. ஒருவர் கருத்து சொன்னார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் போது கூட்டணி வைத்தால்தான் வெற்றிபெற வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பல இடத்தில் மேயர், கவுன்சிலராக இருப்பதற்கு கூட்டணிதான் காரணம். கூட்டணியில் சலசலப்பு இருக்கதான் செய்யும். வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தான் காங்கிரஸ் போட்டியிடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் பணியாற்றி வருகிறார். பொற்கால ஆட்சி என்று சொல்வதற்குப் பதிலாக இந்த ஆண்டு நவீனத்திற்கு ஏற்ப ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி என்று சொன்னேன்.

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் படித்தவர்களாக இருப்பதற்குக் காரணம் காமராஜர். அவர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். தற்போது எத்தனையோ நிதி நெருக்கடி இருக்கும் சூழலிலும் அனைத்து அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.  மதிய உணவு தந்த காமராஜருடன் காலை உணவு தந்த ஸ்டாலினை ஒப்பிடுவது என்ன தவறு? தமிழகத்தில் உள்ள தாய்மார்கள் ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள். நான்கு முனை போட்டியில் வாக்குகள் சிதறத் தான் செய்யும். கடந்த தேர்தலில் மூன்று முனை போட்டி ஏற்பட்டது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்  பா.ம.க,பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம் போன்றவர்களால் தான் பா.ஜ.க.வுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜனை அமித்ஷா மேடையில் திட்டி எச்சரிக்கை செய்தால் அது கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடு இன்றி அவர் தமிழச்சியாக இருப்பதால் இந்த விவகாரத்தில் நான் கண்டிக்கிறேன்.

முஸ்லிம்கள் 25 சதவீதம் பேர் உள்ள நிலையில் ஒருவருக்கு கூட பா.ஜ.க சீட் கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது இந்தியாவுக்கு எப்படி பொதுவான அரசாக இருக்க முடியும். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும்.நீட் தேர்வு குளறுபடி காரணமாக தான் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பம் முதல் நீட் வேண்டாம் என்றார். தற்போது கேட்டால் காங்கிரஸ் தான் நீட் தேர்வு கொண்டு வந்தது என்பார்கள். காங்கிரஸ் நீட் தேர்வு கொண்டு வந்த போது மாநிலங்கள் விருப்பத்தின் பேரில் நடந்து கொள்ளலாம் என்று சொன்னது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் செல்வப்பெருந்தகை, நானும் பிரச்சாரம் செய்வோம். நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெற்றது வரவேற்கிறேன். நெல்லை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உடனடியாக எப்படி குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்.காவல்துறையினர் கைது செய்தால் தான் உண்மை என்னவென்று தெரிய வரும். இன்னும் மோடி தலைமையிலான ஆட்சி 5 மாதங்களில் கலைந்துவிடும். இதற்கு பா.ஜ.க கூட்டணியில் உள்ள கட்சிகளே காரணமாக இருக்கலாம்''என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? - அதிரவைக்கும் சோக சம்பவம்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
A disabled woman was assaulted?-A shocking incident


ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பூசாரிப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர்கள் ராமன்-பழனாள் தம்பதி. மனைவி பழனாள் அஞ்சனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூன்று மகளுக்கும், ஒரு மகனுக்கும், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

கடைசி மகள் கவிதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 32 வயது ஆகிறது மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய் பழனாளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் கவிதா திடீரென மாயமானார். அவரை அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. நம்பியூர் அருகே இருகாலூர் சமத்துவபுரத்தில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டின் கட்டிலில் கவிதா ஆடை இல்லாத நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிதா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடைகளற்ற நிலையில் செல்லம்மாள் பிணமாக கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கவிதா இறந்து கிடந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகு தான் கவிதா எவ்வாறு இறந்தார்? என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

‘மக்களைக் குழப்பும் புதிய கிரிமினல் சட்டங்கள்’ - உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws that confuse people High Court opinion

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

New laws that confuse people High Court opinion

இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அமலுக்கு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.