Advertisment

'இன்னும் 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்?'-பாமக ராமதாஸ் கேள்வி

NN

Advertisment

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது.

இந்நிலையில் 'பெய்த 6 சென்டி மீட்டர் மழைக்கே சென்னை மாநகரத்தால் தங்க முடியவில்லை' என பாமக நிறுனவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ள நிலையில், அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை. சென்னை மாநகரின் பல பகுதிகளில் ஓரடி உயர்த்திற்கும் கூடுதலாக மழை நீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. சென்னையில் தமிழக அரசாலும், சென்னை மாநகராட்சியாலும் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகள் போதிய அளவுக்கு பயனளிக்கவில்லை என்பதையே 6 செ.மீ மழையின் விளைவுகள் காட்டுகின்றன. அப்படியானால், 20 செ.மீ மழை பெய்தால் சென்னை என்னவாகும்? என்ற அச்சம் மேலும் அதிகரித்திருக்கிறது.

NN

Advertisment

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90% முடிவடைந்து விட்டன, 95% முடிவடைந்து விட்டன என்று வீண் விளம்பரம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. உண்மையான அக்கரையை களப்பணிகளில் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டியிருந்தால் 6 செ.மீ மழைக்கு சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும், எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின் மீது அந்த நம்பிக்கை இல்லை என்பதையே பொதுமக்கள் தங்களின் மகிழுந்துகளை வேளச்சேரி பாலத்திலும், பள்ளிக்கரணை பாலத்திலும் நிறுத்தி வைத்திருப்பது காட்டுகிறது. மகிழுந்துகளை நிறுத்தி வைத்த மக்களில் ஒருவர் கூட தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் தங்கள் பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று கூறவில்லை. மாறாக காவல்துறையினர் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை; எங்கள் மகிழுந்துகளை பாலத்தில் தான் நிறுத்துவோம் என்று கூறியிருப்பதன் மூலம் அரசின் மீதான அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது.

பாலங்களின் மீது மகிழுந்துகளை நிறுத்துவது போக்குவரத்தின் வேகத்தைக் குறைக்கும் என்பது தான் உண்மை. ஆனாலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலங்களில் மகிழுந்துகள் நிறுத்தப்படுவதை எவரும் எதிர்க்கவில்லை. அதன் பொருள், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் கையாலாகத்தனத்தை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர் என்பதுதான். தொடக்கத்தில் மகிழுந்துகளை நிறுத்தும் மக்களை மிரட்டியும், அபராதம் விதித்தும் அவற்றை அப்புறப்படுத்தும்படி அச்சுறுத்திய சென்னை மாநகரக் காவல்துறை மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, இப்போது பாலங்களில் நிறுத்தப்படும் மகிழுந்துகளுக்கு நாங்கள் அபராதம் விதிக்கவில்லை என்று பல்டி அடித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்ய வேண்டும். இது நம்மைக் காக்கும் அரசு என்று எண்ணும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Chennai pmk Ramadoss weather
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe