Skip to main content

நிர்மலா தேவியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 செல்போன்களில் இருந்தது என்ன?

Published on 17/04/2018 | Edited on 17/04/2018
cell


கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவியிடம் நள்ளிரவு முழுவதும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும்,  அவரது 3 செல்போன்களை பறிமுதல் செய்து அதிலுள்ள தகவல்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளிடம் பேசிய தொலைப்பேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது காவல்நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் புகார் அளித்திருந்தது. அத்துடன் அவரை கைது செய்யக்கோரி மாணவர்களும், பெற்றோர்களும், மகளிர் அமைப்பினரும் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

nir


இதையடுத்து நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, நிர்மலா தேவி வீட்டின் உள்பக்கம் பூட்டிவிட்டு கதவை திறக்காமல் இருந்தார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த நிர்மலா தேவியை காவல்துறையினர் அதிரடியாக பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்று கைது செய்தனர்.

இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் மீது உயர்மட்ட விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். அந்த விசாரணையை ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நடத்துவார் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார். குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம் நள்ளிரவு முழுவதும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நிர்மலா தேவியிடமிருந்து அவரது 3 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நிர்மலா தேவியின் செல்போன்களில் நிறைய பெண் புகைப்படங்கள் இருப்பதாகவும், உயர் அதிகாரிகள், வி.ஐ.பிக்கள் செல்போன் எண்கள், அவர்களது புகைப்படங்கள்  உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்