
'விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்?' என கேள்வி எழுப்பி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் துறைத் தலைவர் ஒருவர், உடன் பணியாற்றும் பேராசிரியர் மற்றும் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டத்தை அதிமுக முன்னெடுக்கும். சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் துறை தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர் மற்றும் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகள் பேசியுள்ளார். இது குறித்து நிர்வாகத்திலும் பலமுறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்டவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்கள் பணிபுரியும் இடங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது.
பல்வேறு இடங்களில் விசாகா கமிட்டி ஏன் அமைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்த அரசியல் தலைவரின் தலையீடு, அழுத்தம் உள்ளது என்ற கேள்விகள் எழுகிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் ஒரு பதிலும், காவல் ஆணையர் வருவதிலும் கூறி இருந்தது அனைத்து ஊடகங்களும் வெளிவந்தது.
தற்பொழுது தமிழக அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விசாகா கமிட்டி குறித்து என்ன பதிலளிக்கப் போகிறது அரசு. வேலியே பேரை மேய்வது போல் கல்வி கற்கும் கல்வி வளாகங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதற்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.