ADVERTISEMENT

என்ன அவசரம்? நிர்வாகிகளை எகிறிய பிரேமலதா

10:43 PM Mar 03, 2019 | jeevathangavel

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் இந்த பக்கமா அந்த பக்கமா என மதில் மேல் பூனையாக தேமுதிக தொடர்ந்து தன்னை வெளிப்படுத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் 5 பிளஸ் ஒன்று என்றும், திமுக கூட்டணியில் நான்கு பிளஸ் ஒன்று என்றும் அமமுகவில் 14 என்றும் தேமுதிகவின் போட்டி இடங்கள் ஊடகத்தின் மூலமாக வெளிப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மற்றொருபுறம் திமுக அல்லது அதிமுக என்ற அளவில் சீட் சேரிங் ஒருபுறம் இருந்தாலும் வைட்டமின் ''ப'' தான் மூலக்காரணமாக இருப்பதாக அக்கட்சியில் உள்ள நிர்வாகிகளே கூறுகிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு இடத்தில் 250 ''சி'' என்றும் மறுபுறத்தில் 400 ''சி'' வரை பேசப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுகவா அதிமுகவா என எதுவும் தெரியாமல் அக்கட்சியில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்களான பார்த்தசாரதி,அழகாபுரம் மோகன்ராஜ், இளங்கோவன் என யாருக்குமே உண்மை புரியவில்லை.

இப்படி இருக்க இந்த ரகசிய பேச்சுவார்த்தை கட்சியின் பொருளாளரான விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் ஆகிய இருவர் மட்டுமே பேசுவதற்கும், முடிவு செய்வதற்கும் அனைத்தும் அறிந்தவர்களாக உள்ளார்கள். அக்கட்சியில் உள்ள இரண்டாம் நிலை தலைவர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை பெரும் குழப்பத்தில் உள்ளார்கள். இது இப்படி இருக்க நேற்று இரவு பிரேமலதா விஜயகாந்தை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.அப்போது அடுத்து பாஜக ஆட்சிதான் அமையப்போகிறது. அதில் உங்களுக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என கூறியதோடு தமிழக பாஜக பொறுப்பாளரான முரளிதர ராவ் அவரிடம் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பிரேமலதாவை பேசவைத்திருக்கிறார். ஆனால் எந்த பிடியும் கொடுக்காமல் இன்னும் ஓரிருநாளில் கூறுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு தமிழிசை 6 ஆம் தேதி மோடி வரும் பொதுக்கூட்டத்தில் நமது கூட்டணித் தலைவர்கள் முழுமையாக மேடையேற வேண்டும் அதற்குள் நல்ல முடிவை சொல்லுங்கள் என கூறி வந்துள்ளார்.

இந்த பேச்சு வார்த்தைகள் டிமாண்ட், பேரம் இப்படி எல்லாம் ஓடிக்கொண்டிருக்க தேமுதிகவின் கொங்கு மண்டல முக்கிய நிர்வாகிகள் சிலர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்த்தித்துள்ளார்கள். அப்போது அவர்கள் அரசியல் எதிர்காலத்தை கவனித்து சீக்கிரமாக முடிவெடுங்கள் என கூறியுள்ளார்கள். அதற்கு அவர்களிடம் பேசிய பிரேமலதா என்ன அவசரம் தேர்தல் தேதியா அறிவித்துவிட்டார்கள் என கேட்டதோடு, திருப்பூர் இல்லைனா விட்டுடலாமா சேலம் இல்லைனா விட்டுடலாமா என கேட்டிருக்கிறார். அதற்கு நிர்வாகிகள் எந்த கட்சி கூட்டணி என்று கேட்க அது எந்தகட்சியாக இருந்தால் என்ன நம் எதிர்காலத்தை சரியாக தீர்மானிப்போம் அவசரப்படாதீங்க என்று கடுகடுப்பாக கூறியிருக்கிறார். கட்சி நிர்வாகிகள் கேப்டன்தான் எக்குத்தப்பாக குழப்புவார் என்றால் அவர் மனைவி பிரேமலதாவும் நம்மை தலைசுற்ற வைக்கிறாரே என கிறுகிறுப்பாக பேசுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT