Skip to main content

’என்ன செய்வதென்று புரியாமல் கைபிசைந்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது’- திருமாவளவன்

Published on 21/08/2018 | Edited on 21/08/2018
t

 

வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளான கேரளாவின் நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:

’’கேரள மாநிலம் தொடர் மழையால், பெருவெள்ளத்தால் பேராபத்தில் சிக்கியுள்ளது. சுமார் ஏழரை லட்சம் மக்கள் அகதி முகாம்களில் அவதிப்படுகின்றனர். இதுவரை சுமார் 500பேர் பலியாகியிருப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. கேரள மாநிலம் மீண்டும் இயல்பு நிலைக்கு எப்போது திரும்பும்; எவ்வாறு திரும்பும் என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.

 

முல்லை பெரியாறு அணை உட்பட கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. எந்நேரத்திலும் அணைகள் உடையலாம் என்னும் அச்சத்தில் மக்கள் உறைந்துபோய் கிடக்கின்றனர். என்ன செய்வதென்று புரியாமல் கைபிசைந்து நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மைய அரசு ரூபாய் 500 கோடி நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகள் தங்களால் இயன்ற நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளன. மனிதநேயமுள்ள தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் தத்தமது வலிமைகளுக்கு ஏற்ப நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்களை அளித்து வருகின்றனர்.

 

இத்தகைய சூழலில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கேரள வாழ் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளும் மனிதநேய அடிப்படையில் உரிய பங்களிப்பை செலுத்த வேண்டிய கடமை உள்ளது. எனவே, இயக்கத்தின் முன்னணி தோழர்கள் ஆங்காங்கே மாவட்ட வரியாக தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருளுதவியை அளிக்க முன்வர வேண்டும். கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும். அவற்றை உரிய வழிமுறைபடி கேரள மக்களுக்கு சேர்ப்பிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும். இப்பணிகளை மேற்கொள்வதால் பனைவிதைகள் ஊன்றும் பணிகள் தடைபட்டுவிடக் கூடாது. ஆகஸ்ட் 31 வரையில் ஒவ்வொரு நாளும் பனைவிதைகளை ஊன்றும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

 

கேரள வாழ் மக்களை இந்த பேரிடரிலிருந்து பாதுகாக்கும் கடமையில் நம்மாலான பங்களிப்பை செய்வோம். எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்டுகோப்பாக ஒருங்கிணைந்து நிவாரணப் பொருட்களைச் சேகரித்து தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’

சார்ந்த செய்திகள்