கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் 5 பேருடன் தனியார் பள்ளி வேன் ஒன்று இன்று (08.07.2025) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதாவது 6ஆம் வகுப்பு மாணவன் நிமலேஷ், 11ஆம் வகுப்பு மாணவி சாருமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அதே சமயம் செழியன் என்ற மாணவன் ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த பகுதியில் கேட் கீப்பர் அலட்சியமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். அதே சமயம் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட்டானது, உள்ளிணைப்பு இல்லாத (Non inderlocking) கேட் என்பதால் அதை மூடுவதற்கு தொலைப்பேசி மூலம் தகவல் அளிக்கப்படும் என்ற நிலையில், ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடுவதற்கான தகவல் முறையாக அளிக்கப்பட்டதா அல்லது இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும் இந்த விபத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். முன்னதாக சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா அலட்சியமாக இருந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் தாக்கினர். இதனால் பங்கஜ் சர்மா மீட்கப்பட்டு போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனர். அவரிடம் தொடர்ச்சியாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது பள்ளி வேனை ஓட்டி வந்த சங்கர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கேட்டை திறந்ததாக பஞ்சஜ் சர்மா வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
மற்றொரு புறம் தீவிர சிகிச்சையில் உள்ள வேன் ஓட்டுநர் சங்கர் இதனை மறுத்திருந்தார். அதாவது ரயில்வே கேட் திறந்து இருந்ததால் ரயில் சென்றிருக்கும் என வேனை முன்னோக்கி இயக்கியதாகவும், ரயில் வருவதற்கான சத்தம் வராததால் வேனை இயக்கியதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா மீது சிதம்பரம் ரயில்வே காவல்துறையினர் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்படி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அவரிடம் திருச்சி கோட்ட பொது மேலாளர் (டிஆர்.எம்) அன்பழகன் நடந்த விஷயம் குறித்துக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு ,”காலையில் 7.05க்கு கேட் மூடப்பட்டது. சுமார் 07.25 வரை கேட் திறக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள 2 பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதனைச் சரிசெய்யக் காலை 07.25க்கு யாரையும் ஆலோசிக்காமல் கேட் திறக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சிதம்பரம் குற்றவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.