Skip to main content

வேலைவாய்ப்பை பெருக்க பினாமி அரசின் செயல்திட்டம் என்ன? ராமதாஸ் கேள்வி

Published on 15/04/2018 | Edited on 15/04/2018
jops



வேலைவாய்ப்பை பெருக்க தமிழக அரசின் செயல் திட்டம் என்ன என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழக அரசின் மாநில இளைஞர் கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவதைப் போன்று விண்ணை முட்டும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போதிலும், அவற்றை எட்டுவதற்கான எந்த செயல்திட்டமும் இளைஞர் கொள்கையில் இடம்பெறவில்லை. இளைஞர்களை முன்னேற்றுவதற்கான கொள்கை அவர்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருப்பது கண்டிக்கத்தது.
 

தமிழ்நாடு மாநில இளைஞர் கொள்கை 2018-ஆம் ஆண்டில் தான் வெளியிடப்பட்டிருக்கும் போதிலும், அது 2016-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. அதன் இலக்குகள் அனைத்தும் அடுத்த 7 ஆண்டுகளில் 2023-ஆம் ஆண்டுக்குள் எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், இளைஞர்  கொள்கை இரு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டு, இப்போது வெளியிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. தமிழக அரசு எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம்.
 

2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் தனிநபர் வருமானம்  மூன்று மடங்காக உயர்த்தப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் ரூ.1,53,263 ஆகும். இதை 2023 ஆம் ஆண்டில் ரூ.4,59,789 ஆக உயர்த்த வேண்டும் என்பது தான் இலக்காகும்.  ஒப்பீட்டளவில் பார்த்தால் இது பெரிய இலக்கல்ல. கோவா, தில்லி மாநிலங்களும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் இந்த இலக்கை நெருங்கி விட்டன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் அவை இந்த இலக்கை எட்டிவிடும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது எட்ட முடியாத இலக்கல்ல. ஆனால், இதை எட்டுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் திறன் தற்போதைய அரசுக்கு இல்லை என்பதே உண்மை.

 

ops -eps


 

தமிழகத்தின் தனிநபர் வருமானத்தை 2023-ஆம் ஆண்டுக்குள் ரூ.4.60 லட்சமாக உயர்த்த, தனிநபர் வருமானம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.43,662 அதாவது 28.5% அதிகரிக்க வேண்டும். அதற்காக, தமிழகத்தின் வேளாண் உற்பத்தி குறைந்தபட்சம் 6% அளவுக்கு அதிகரிப்பது அவசியமாகும். ஆனால்,  தமிழகத்தின் வேளாண்துறை வளர்ச்சி கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மைனஸ் 3.60%, 2016-17ஆம் ஆண்டில் மைனஸ் 8% என எதிர்மறை வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை  மாற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளையும் பினாமி தமிழக அரசு இன்றுவரை மேற்கொள்ளவில்லை.
 

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 80 லட்சம் இளைஞர்கள், வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்யாமல் 70 லட்சம் இளைஞர்கள் என மொத்தம் ஒன்றரை கோடி பேர் வேலையில்லாமல் வாடுகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்குவதற்கான திட்டங்கள் எதுவும்  மாநில இளைஞர் கொள்கையில் அறிவிக்கப்படவில்லை. மாறாக, வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக வேளாண்மை, வாகனத் தொழிற்சாலை உள்ளிட்ட 14 தொழில்துறைகளில் கவனம் செலுத்தப்படும்  என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 2001 முதல் 2011 வரையிலான பத்தாண்டுகளில் 8,67,582 பேர் விவசாயத்தை விட்டு வெளியேறி வேறு வேலைகளுக்கு சென்றுள்ளனர். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 6 ஆண்டுகளில் வேளாண்மை கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில், அதன் மூலம் எத்தகைய வேலைவாய்ப்புகளை பினாமி அரசு உருவாக்கும்?
 

வேலைவாய்ப்புக்காக தமிழக அரசு நம்பியிருக்கும் மற்றொரு துறை வாகன உற்பத்தித் துறை ஆகும். இத்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி  முதலீடுகளை பினாமி அரசு இழந்ததால் அந்த முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன. இவ்வாறு தமிழகத்திற்கு தானாக வந்த முதலீடுகளைக் கூட தவறவிட்ட அரசு மோட்டார் வாகனத் தொழிலை வலுப்படுத்தி வேலைவாய்ப்பைப் பெருக்கும் என்பதையெல்லாம் குழந்தைகள் கூட நம்ப மாட்டார்கள்.

 

Ramadoss


 

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் 15 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் இளைஞர்கள் என்றும், இவர்களின் எண்ணிக்கை தமிழக மக்கள் தொகையில் சரிபாதி என்றும் தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. அவர்களில் 40 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் மதுப் பழக்கத்திற்கு  அடிமையானவர்கள் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினாலே தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு சுமார் 20 விழுக்காடு அதிகரிக்கக்கூடும். ஆனால், மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்காக ஊரெங்கும் மதுக்கடைகளை திறந்து இளைஞர் சமுதாயத்தை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் சீரழித்து வருகின்றன. முளைக்கும் செடி மீது வெந்நீரை ஊற்றி விட்டு, அதை தோட்டமாக்கிக் காட்டுகிறேன் என்று கூறுவதைப் போலத் தான்  இளைஞர்களை மதுவைக் கொடுத்து சீரழித்து விட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்காக இளைஞர் கொள்கையை வெளியிடுவதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு.
 

தமிழக அரசு வெளியிட்டுள்ள மாநில இளைஞர் கொள்கை யாருக்கும், எந்த பயனையும் அளிக்கப் போவதில்லை. தமிழகத்தில் மதுவை ஒழித்து வேலைவாய்ப்பைப் பெருக்குவதன் மூலம் மட்டும் தான் இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும். அதை செய்யாததன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை இருண்ட காலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் தான் பினாமி அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.