/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1918.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு சதுப்பு நில காடுகளில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்வார்கள். இதில் வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு சுற்றுலாப் பயணிகளும் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள். இந்நிலையில், நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் மானிய கோரிக்கையின் போது பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப்நந்தூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம், உள்ளிட்டவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு பிச்சாரவத்திற்கு வருகை தந்து சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அலுவலர்களுடன் கேட்டறிந்தனர்.
இரவு நேரம் என்பதால் அங்குள்ள அனைத்து இடங்களையும் ஆய்வு செய்யமுடியாமல் செவ்வாய்க்கிழமை இரவு சிதம்பரத்திலே தங்கி புதன்கிழமை காலை 7 மணிக்குப் படகு மூலம் பிச்சாரவம் சதுப்புநில காடுகளில் படகு சவாரி செய்து சதுப்பு நில காடுகள் குறித்தும் அங்கு வரும் பறவைகள் மற்றும் விலங்குள், மரங்கள் குறித்தும் கேட்டறிந்தார் அமைச்சர். பின்னர் சுற்றுலா மைய வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்கள் அதன் தன்மைகள் குறித்தும் காலியாக உள்ள இடங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய வகையில் பூங்கா, விளையாட்டு வளாகம் உள்ளிட்டவை அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிச்சாவரத்தில் படகு ஓட்டும் தொழிலாளர்களிடம் குறைகளைக்கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_479.jpg)
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர், “பிச்சாவரத்தில் சதுப்பு நில காடுகள் சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய சதுப்புநில காடுகள் ஆகும். இங்குள்ள நீர்நிலைகள் படகு சவாரிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. பிச்சாவரம் படகு குழாம் 1984-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 3 முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் கூடுதல் வசதிகள் செய்து தரும் வகையிலும் படகு குழாம், பூங்கா, திறந்தவெளி முகாம், காட்சி கோபுரம், உணவகம் மற்றும் தங்கும் விடுதி ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உலகத்தரத்தில் மேம்படுத்த அறிவிப்புகள் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் பயன்பாட்டிற்காகத்தங்கும் விடுதி மற்றும் கழிவறைகள் சீரமைக்கப்படும். சுற்றுலா தளத்தில் படகு சவாரி நேரத்தைக் காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை அதிகப்படுத்த வனத்துறை அதிகாரிகளோடு பேசி முடிவு எடுத்துள்ளோம்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கடல் உணவு திருவிழாவும், கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விழாக்களும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சதுப்பு நிலக் காட்டில் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமாகக் கட்டிடம் உள்ளது. அது சீர்செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். தமிழக முதல்வரின் முழு முயற்சியில் பிச்சாவரம் சுற்றுலா மையத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்ற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்” என்றார்.
இந்த ஆய்வில் சிதம்பரம் வருவாய்க் கோட்டாட்சியர்(பொ) உதயகுமார், வட்டாட்சியர் ஆனந்த், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட வன அலுவலர் செல்வம், துணை இயக்குநர் (மீன்வளம்) வேல்முருகன், சுற்றுலா மைய மண்டல மேலாளர் சபேசன், பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார், சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ், கிள்ளை பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)